மாவட்ட செய்திகள்

கருணாநிதி மரணம்: நாமக்கல்லில் பஸ்கள் நிறுத்தம்-கடைகள் அடைப்பு + "||" + Karunanidhi's Death: Bus Stop Shops in Namakkal

கருணாநிதி மரணம்: நாமக்கல்லில் பஸ்கள் நிறுத்தம்-கடைகள் அடைப்பு

கருணாநிதி மரணம்: நாமக்கல்லில் பஸ்கள் நிறுத்தம்-கடைகள் அடைப்பு
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து நாமக்கல்லில் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 6 மணிக்கு மதுக்கடைகளும் மூடப்பட்டன.
நாமக்கல்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையடுத்து அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சோகம் அடைந்தனர். இந்த தகவல் வெளியானதும் நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு செல்லும் 20-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டன. மேலும் நேற்று மாலை 5 மணி அளவிலேயே பெரும்பாலான தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன.


இதேபோல் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக பெண்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, முக்கிய வழித்தடங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து சேலம், கரூர், திருச்சி போன்ற வழித்தடங்களில் போலீஸ் ஜீப் முன்னே செல்ல அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் பெரும்பாலான கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையே பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 7 மணி அளவிலேயே அடைக்கப்பட்டு விட்டன. இதனால் பயணிகள் குடிநீர் கூட கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர்.

படிப்படியாக இரவு 8 மணி அளவில் திருச்சி சாலை, சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை, மோகனூர் சாலை என நகர் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் ராசிபுரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, எலச்சிபாளையம், பரமத்திவேலூர், மோகனூர், கந்தம்பாளையம், குமாரபாளையம், பள்ளிபாளையம், சேந்தமங்கலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதலே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான கடைகளை கடைக்காரர்களே அடைத்துக் கொண்டனர். இதேபோல மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

அரசு உத்தரவின் பேரில் நேற்று மாலை 6 மணிக்கு நாமக்கல்லில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. இதனால் மாலை 5.30 மணி அளவில் மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதே நிலைதான் மாவட்டம் முழுவதும் நீடித்தது. சினிமா தியேட்டர்களிலும் நேற்று இரவு காட்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது.

அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வழக்கத்தை காட்டிலும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவ, மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாமக்கல் பஸ்நிலையம், ரெயில் நிலையம், பணிமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி வேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் என மாவட்டம் முழுவதும் பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

நாமக்கல் நகரிலும் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே தி.மு.க.வினர் கருணாநிதி மறைவையொட்டி பிளக்ஸ் பேனர்கள் வைத்து இருந்ததை காண முடிந்தது.

பரமத்தி வேலூரில் தினசரி நடைபெற்று வந்த வாழைத்தார் ஏல சந்தையும், புதன்கிழமை வெல்ல ஏல சந்தையிலும் ஏலம் ரத்து செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதுமே பல்வேறு இடங்களில் தி.மு.க. கொடிக்கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. பரமத்தி வேலூரில் சில இடங்களில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியும் ஏற்றப்பட்டு இருந்தது. திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட சில இடங்களில் தி.மு.க.வினர் கூட்டம், கூட்டமாக திரண்டு, சோகமாக அமர்ந்து இருந்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களும் அடைக்கப்பட்டு இருந்தன.