சேலத்தில் இரவில் தி.மு.க.வினர் மறியல்


சேலத்தில் இரவில் தி.மு.க.வினர் மறியல்
x
தினத்தந்தி 7 Aug 2018 11:19 PM GMT (Updated: 7 Aug 2018 11:19 PM GMT)

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கக் கோரி சேலத்தில் இரவில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம், 


தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று மாலை மரணம் அடைந்தார். இதை கேட்டு தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உடலை மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி வழங்கக் கோரி தி.மு.க. தொண்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை அருகே நேற்று இரவு 9 மணியளவில் தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டவாறு மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே இரவு 10.30 மணி அளவில் ஜங்சனை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி உண்ணாவிரதம் இருக்க மேற்கொண்டார். ஆனால் அவரிடம் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

கெங்கவல்லியில் உள்ள அண்ணா சிலை முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரவு எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ரவுண்டானாவில் ஒன்றிய தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதே போல கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் இடம் ஒதுக்க வலியுறுத்தி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகுடஞ்சாவடியில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story