மாவட்ட செய்திகள்

கருணாநிதி மறைவு: ஈரோட்டில் பஸ்கள் ஓடவில்லை–கடைகள் அடைப்பு + "||" + Karunanidhi's death: Buses did not run in Erode - shops shutters

கருணாநிதி மறைவு: ஈரோட்டில் பஸ்கள் ஓடவில்லை–கடைகள் அடைப்பு

கருணாநிதி மறைவு: ஈரோட்டில் பஸ்கள் ஓடவில்லை–கடைகள் அடைப்பு
கருணாநிதி மறைவையொட்டி ஈரோட்டில் பஸ்கள் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடின.

ஈரோடு,

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிஅளவில் சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் இறந்தார். அவருடைய உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஈரோடு மாவட்டத்திலும் கருணாநிதியின் மறைவுக்கு பல்வேறு இடங்களில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவருடைய இறப்பு பற்றிய தகவல் வெளியானதும் மாவட்டம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. நேற்றும் எந்தவொரு பஸ்களும் ஓடவில்லை.

அரசு, தனியார் டவுன் பஸ்கள், வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள், மினி பஸ்கள் என அனைத்து பஸ்களும் இயங்கவில்லை. இதனால் ஈரோடு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

ஆட்டோக்கள், வாடகை கார்கள், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. பஸ்கள் ஓடாததால் அவசர வேலையாக வெளியூர்களுக்கு சென்றவர்கள் ரெயிலை நாடி சென்றனர். இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. லாரிகள் உள்பட சரக்கு வாகனங்களும் இயக்கப்படவில்லை. சாலைகளில் இருசக்கர வாகனங்களும், கார்களும் மட்டுமே ஓடின. இதனால் 4 வழிச்சாலைகளும் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

ஈரோட்டில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டன. ஈரோடு பிரப்ரோடு, காந்திஜிரோடு, ஈ.வி.என்.ரோடு, மேட்டூர்ரோடு, பெருந்துறை ரோடு, நசியனூர் ரோடு, சம்பத்நகர், சூரம்பட்டி, சத்திரோடு, பெரியவலசு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், ஈரோடு பஸ் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் ஓட்டல்கள், மருந்து கடைகள், ஜவுளிக்கடைகள், டீக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மணிக்கூண்டு, ஈஸ்வரன்கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, நேதாஜிரோடு, வெங்கடாசலம் வீதி, கச்சேரி வீதி, கனி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளும் மூடப்பட்டன. நேதாஜி காய்கறி மார்க்கெட்டும் மூடப்பட்டது. ஆனால் நாச்சியப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வழக்கம்போல் செயல்பட்டது.

இதேபோல் சிறிய தெருக்களில் உள்ள மளிகைக்கடைகள், டீக்கடைகள் என ஒருசில கடைகள் மட்டும் ஆங்காங்கே செயல்பட்டன. கடைகள் மூடப்பட்டு இருந்ததாலும், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததாலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு இருந்தது. ஈரோடு ஈஸ்வரன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆவின் பாலகங்களும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள உணவகமும் செயல்பட்டது.

ஈரோடு மாநகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மருந்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஆனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்து கடைகள் செயல்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடந்து வரும் புத்தக கண்காட்சிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதேபோல் மஞ்சள் மார்க்கெட்டுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பொதுமக்களின் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்ததால், குழுவாக சேர்ந்து செல்பவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள். மேலும், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல்
கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
2. கருணாநிதிக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
கருணாநிதி இறந்த பிறகு அவருக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் எனபேரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
3. ஜூன் 3–ந்தேதி கருணாநிதியின் பிறந்த நாள் தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்
கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3–ந்தேதி தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளார்.
4. மதுரையில் அண்ணா பஸ் நிலையம் அருகே கருணாநிதிக்கு சிலை - மு.க.அழகிரி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக மு.க.அழகிரி கூறியுள்ளார்.
5. ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் - நாராயணசாமி
ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.