முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு
x
தினத்தந்தி 8 Aug 2018 9:30 PM GMT (Updated: 8 Aug 2018 9:24 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

தேனி, 


தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
கடந்த 2-ந்தேதி அணையின் நீர்மட்டம் 135.10 அடியாக இருந்தது. தொடர்ந்து அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் சரியத் தொடங்கியது. நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 132.80 அடியாக இருந்தது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,640 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் 5,352 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

அதே நேரத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 58.56 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,365 கன அடியாக உள்ளது. அணையில் 3,336 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 960 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

வைகை அணைக்கு மூலவைகை ஆற்றில் இருந்து நீர்வரத்து ஏற்படவில்லை. முழுக்க, முழுக்க முல்லைப்பெரியாற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீரே வைகை வந்து சேர்கிறது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் ஆரோக்கியமான அளவில் உள்ளது. எனவே, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், அந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் அல்லது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர்.-தந்தை பெரியார் கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story