நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து; டிரைவர் படுகாயம்
பல்லடம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இதில் டிரைவர் படுகாயமடைந்தார்.
பல்லடம்,
தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு 2 லாரிகள் நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் புறப்பட்டன. இதில் ஒரு லாரியை மேலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த தருமன் என்பவரின் மகன் சிவபெருமாள்(வயது 36) என்பவர் ஓட்ட அவருடைய தம்பி கோபாலகிருஷ்ணன்(27) என்பவர் கிளனராக உடன் வந்தார். மற்றொரு லாரியை சிவபெருமாளின் தம்பிகள் ராதாகிருஷ்ணன்(31) ஓட்ட, முத்துபாலகிருஷ்ணன்(32) கிளனராக உடன் வந்தார்.
இந்த லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தன. இதில் சிவபெருமாள் தான் ஓட்டி வந்த லாரியை பல்லடத்தை அடுத்துள்ள துத்தேரிபாளையம் பிரிவு அருகே நிறுத்திவிட்டு, சிவபெருமாளும், கோபாலகிருஷ்ணனும் இறங்கி சென்றனர். அப்போது ராதாகிருஷ்ணன் ஓட்டி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் ஓட்டிவந்த லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி ராதாகிருஷ்ணன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராதாகிருஷ்ணனை மீட்டனர். இந்த விபத்தில் ராதாகிருஷ்ணனின் இருகால்களும் முறிந்தன. இதைதொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story