கருணாநிதி மரணம்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் மவுன ஊர்வலம் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்


கருணாநிதி மரணம்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் மவுன ஊர்வலம் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்
x
தினத்தந்தி 8 Aug 2018 10:45 PM GMT (Updated: 8 Aug 2018 10:16 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையடுத்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் மவுன ஊர்வலம் நடைபெற்றது. தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையடுத்து ராசிபுரத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. ராசிபுரத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், சமத்துவ மக்கள் கட்சி உள்பட சர்வ கட்சியினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் முன்பு ம.தி.மு.க. தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து ஜோதியை கொண்டு சென்றனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களும் கருப்பு பேட்ஜ், கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

இதில் நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், முன்னாள் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் வி.பாலு, நகர தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஸ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன், நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு முரளி, நகர ம.தி.மு.க. செயலாளர் ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் மணிமாறன், சமத்துவ மக்கள் கட்சி நகர செயலாளர் பாலகிருஷ்ணன், அ.ம.மு.க. நகர பேரவை செயலாளர் தர்மராஜன், தொ.மு.ச. தலைவர் பாலு, செயலாளர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் புதிய பஸ்நிலையத்தில் புறப்பட்டு அண்ணாசாலை வழியாக பழைய பஸ்நிலைய பகுதியில் முடிவடைந்தது.

பரமத்திவேலூர் தாலுகா பகுதிகளில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

நன்செய் இடையாற்றில் கருணாநிதி மறைவையொட்டி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒப்பாரி வைத்து இரங்கல் தெரிவித்தனர். பொத்தனூரில் தி.மு.க.வினர் 11 பேர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

மோகனூர் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் மோகனூர் அண்ணா சிலை அருகில் தி.மு.க. நகர செயலாளர் செல்லவேல் தலைமையில் மவுன ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் பஸ்நிலையம் வழியாக வந்து அண்ணாசிலை அருகே அனைத்து கட்சி சார்பில் மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தி.மு.க. முன்னாள் நகர செயலாளர், அர்ச்சுனன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் டாக்டர் இளமதி, பகவதிராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அ.தி.மு.க. மோகனூர் நகர செயலாளர் தங்கமுத்து, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் புரட்சிபாலு, குமரிபாளையம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராமலிங்கம், சேனாபதி, நகர துணைச்செயலாளர் சிவஞானம், காங்கிரஸ் நகர தலைவர் சிங்காரம், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் கனகராஜ், அ.ம.மு.க. நகர பொறுப்பாளர் தேவநாதன் மற்றும் ஆரியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாகண்ணன், டாக்டர் கருணாநிதி உட்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் பாலப்பட்டி, கொமாரபாளையம் பகுதிகளில் நடைபெற்ற மவுன ஊர்வலத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அம்பிகா பாண்டியன், செங்கப்பள்ளி ஊராட்சி செயலாளர் பூபதி, மாப்பிள்ளை மீரா, ஈஸ்வரன், ஜாபர் அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சேந்தமங்கலத்தில் பேரூர் தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. பேரூர் கழக செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார். பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் பெரியசாமி, தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் சேந்தமங்கலம் பெரியதேர் திடலில் தொடங்கி பெருமாள் கோவில் வீதி, மார்க்கெட் வழியாக சென்று மீண்டும் பெரிய தேர் திடலை அடைந்தது. சேந்தமங்கலம் 8-வது வார்டு பகுதியில் தி.மு.க.வினர் 6 பேர் மொட்டை அடித்து கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம்புதூரில் பஸ்நிறுத்தம் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கந்தம்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. பின்னர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இதற்கு நல்லூர் ஊராட்சி செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி குணசேகரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அரங்க.பழனிசாமி, மணியனூர் ஊராட்சி செயலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

திருச்செங்கோடு நகரில் 33 வார்டுகளிலும் தி.மு.க.வினர் துக்கம் அனுசரித்தனர். திருச்செங்கோடு அண்ணாசிலை முன்பு கருணாநிதி உருவப்படம் வைத்து மலர்மாலை அணிவித்து, முன்னாள் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் தாண்டவன் தலைமையில் நகர நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேபோல நகரின் பல இடங்களிலும் தி.மு.க.வினர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

திருச்செங்கோடு அருகே மொளசி கிராமத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவபொம்மை செய்து தங்களது குடும்ப உறுப்பினர் இறந்து விட்டதுபோல சடங்குகள் செய்யப்பட்டு, தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மல்லசமுத்திரம் பேரூர் தி.மு.க. சார்பில் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் பேரூர் செயலாளர் திருமலை தலைமையில் நடந்தது. திரு.வி.க. திடலில் கோபுரம் போன்று கருணாநிதி கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. திரு.வி.க. திடலில் புறப்பட்ட ஊர்வலம் ராஜாஜி வீதி, பஸ்நிலையம், வ.உ.சி. தெரு, தேர்வீதி வழியாக சென்று ஜவஹர் மைதானத்தை வந்தடைந்தது.

இதில் அவைத்தலைவர் கிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் குப்புசாமி, தொண்டர் அணி கதிர்வேல், ம.தி.மு.க. கணேசன், ஜாகீர்உசேன், ஊராட்சி செயலாளர்கள் லோகநாதன், மாது, மாவட்ட ஆதிதிராவிடர் அணி செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தரம், குமரவேல், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கோபி சரவணன், சுதாகர் மற்றும் வார்டு செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கருணாநிதி மறைவையொட்டி குமாரபாளையத்தில் அனைத்து கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் சேகர் தலைமையில் தொடங்கியது. ராஜம் தியேட்டர் முன்பிருந்து தொடங்கிய ஊர்வலம் மெயின்ரோடு வழியாக சென்று நகராட்சி அருகில் உள்ள காவிரி ஆற்றில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட அமரர் வாகனத்தில் எடுத்து வரப்பட்டது. வரும்போது பெண்கள் ஒப்பாரி பாடியபடி வந்தனர்.

குமாரபாளையம் காவிரி ஆற்றை அடைந்ததும் கருணாநிதியின் உருவபொம்மை ஆற்றில் விடப்பட்டது. அதன்பின் நகராட்சி காந்தி சிலை முன்பு இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுப்பிரமணி, நகர துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, காங்கிரஸ் கட்சி சார்பில் ஜானகிராமன், தங்கராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுகம் மற்றும் பலர் பேசினர். பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.

சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்தது போல், குமாரபாளையம் தி.மு.க. அலுவலகம் அருகில் கண்ணாடி பேழையில் கருணாநிதியின் உடல்போல் உருவபொம்மை வைக்கப்பட்டு தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

பள்ளிபாளையத்தில் நகர தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. இதையொட்டி நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பஸ் நிலையத்தில் இருந்து தி.மு.க.வினர் டி.வி.எஸ்.மேடு, ஒட்டமெத்தை, அக்ரஹாரம், ராஜவீதி வழியாக சென்று மீண்டும் பஸ்நிலையம் வந்தனர். அங்கு கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஜான், மாவட்ட பிரதிநிதி மாதேஸ்வரன், மனோகரன், நூல் செல்வம், மீனவர் அணி செல்வம், நகர முன்னாள் கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காவேரி ஆர்.எஸ். பகுதியில் பெண்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். காடச்சநல்லூரில் சமத்துவ மக்கள் கட்சியினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையடுத்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் மவுன ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். 

Next Story