கருணாநிதியை கவர்ந்த மாமல்லபுரம்


கருணாநிதியை கவர்ந்த மாமல்லபுரம்
x
தினத்தந்தி 9 Aug 2018 4:45 AM IST (Updated: 9 Aug 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோதும், ஆட்சியில் இல்லாத போதும் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்திற்கு வந்து ஓய்வு எடுப்பார். கருணாநிதியை கவர்ந்த இடமாக மாமல்லபுரம் விளங்கியது.

மாமல்லபுரம்,

முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி மாமல்லபுரம் வரும்போதெல்லாம் அவருடன் நெருக்கமாக பழகிய மாமல்லபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவரும், தி.மு.க. பிரமுகருமாகிய விசுவநாதன் அவருடன் தான் பழகிய அனுபவங்களை தினத்தந்தி நிருபரிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:–

தேர்தல் நேரங்களில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பொதுக்குழு தீர்மானங்கள் தயாரித்தல் போன்ற முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு மாமல்லபுரம் நகரையே தேர்வு செய்து அங்கு அவர் வருவார்.

கடந்த 40 ஆண்டுகளாக மாமல்லபுரம் வரும்போதெல்லாம் அங்குள்ள இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டலில் அவர் தங்குவார். 2, 3 நாட்கள் அவர் அங்கு ஓய்வு எடுப்பது வழக்கம். தற்போது இந்த ஓட்டலை ஜி.ஆர்.டி. நிறுவனம் வாங்கி ரேடிசன் டெம்பில் பே என்ற பெயரில் நடத்தி வருகிறது. கடற்கரையின் ஓரம் உள்ள இயற்கை சூழ்ந்த அந்த ஓட்டலில் தங்கிதான் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவது போன்ற பணிகளை செய்வார்.

கருணாநிதிக்கு மாமல்லபுரம் என்றால் ரொம்ப கவர்ந்த ஊராகும். கலைகளின் மேல் ஈர்ப்பு கொண்ட அவர் மாமல்லபுரம் சிற்பங்களின் அழகினையும், அதன் வரலாறுகளையும் படைப்பாகவும், படங்களில் கதை, வசனங்களில் கோடிட்டு காட்டியுள்ளார்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாமல்லபுரத்திற்கு அடிக்கடி வந்து சென்ற அவரது மனதில் இந்த ஊர் நீங்காத இடம் பிடித்துள்ளது.

அவரது மறைவு மாமல்லபுரத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story