மாவட்ட செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு படிக்க சென்ற தமிழக, கேரள மாணவர்கள் 22 பேரின் விசா ரத்து + "||" + Australia went on to study in Tamil Nadu, Kerala and students to cancel the visa of 22 people

ஆஸ்திரேலியாவுக்கு படிக்க சென்ற தமிழக, கேரள மாணவர்கள் 22 பேரின் விசா ரத்து

ஆஸ்திரேலியாவுக்கு படிக்க சென்ற தமிழக, கேரள மாணவர்கள் 22 பேரின் விசா ரத்து
ஆஸ்திரேலியாவுக்கு படிக்க சென்ற தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 22 மாணவர்களின் விசாவை அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. போலி சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கோவை,


தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சிலர் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். ஒரு சிலர் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 22 பேர் ஆஸ்திரேலிய அரசிடம் சமர்ப்பித்திருந்த சான்றிதழ்கள் போலியானவை என்பதை அந்த நாட்டு அதிகாரிகள் கண்ட றிந்தனர்.

இதையடுத்து அந்த 22 பேரின் விசா ரத்து செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் மாணவர்களிடம் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசா ரத்து செய்யப்பட்டதால் 22 பேரும் உடனடியாக ஊர் திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் ஏஜென்சிகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் ஆவார்கள். மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தினர் போலியாக தேசிய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ்களை வழங்கி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி விட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டினர். தற்போது ஆஸ்திரேலியாவில் தவித்து வரும் மாணவர்கள் விவசாய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மாணவர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கிய ஏஜென்சிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் தவிக்கும் மாணவர்களுக்கான சட்ட உதவி ஆலோசகரும், வக்கீலுமான ஸ்ரீ கூறியதாவது:-

கோவை, ஈரோடு, சேலம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தனியார் ஏஜென்சிகளிடம் ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் என்று கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். எம்.பி.ஏ. அல்லாத வேறு பிரிவு மாணவர்களை எம்.பி.ஏ. படிக்க வைத்துள்ளனர்.

இதற்காக போலி சான்றிதழ்களை ஏஜென்சிகள் வழங்கியுள்ளனர். இது மாணவர்களுக்கு தெரியாது. ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே மாணவர்கள் சார்பில் நான் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் பேசி வருகிறேன். சட்ட பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன். மாணவர்களை சிக்கலில் தவிக்கவிட்ட ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசிலும் புகார் மனு அளிக்க இருக்கிறோம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆண்டுதோறும் மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.