திருப்பூர் மாவட்டம் முழுவதும் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது


திருப்பூர் மாவட்டம் முழுவதும் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது
x
தினத்தந்தி 9 Aug 2018 11:01 PM GMT (Updated: 9 Aug 2018 11:01 PM GMT)

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடத்தொடங்கின.

திருப்பூர், 



தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்களும் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சொந்த வாகனங்களை வைத்திருந்தவர்கள் அதில் தங்கள் பயணங்களை மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள். எப்போதும் பரபரப்புடன் காணப்படும் திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் பஸ்கள் இயக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு வரை எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை.


இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டிருந்தன. மூடப்பட்டிருந்த தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கின.

இதன்காரணமாக தொழிலாளர்கள் தங்கள் பணிக்கு திரும்பினார்கள். இருப்பினும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் ஆங்காங்கே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பஸ் நிலையங்களில் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு நாள் விடுமுறையில் நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதற்காக ஜாப் ஒர்க் நிறுவனத்தினரும், சிறு, குறு ஆடை தயாரிப்பு நிறுவனத்தினரும் மும்முரமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்த பகுதிகளிலும் அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாததால் பொதுமக்களும், போலீசாரும் நிம்மதி அடைந்தனர். 

Next Story