காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம்,
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து காவிரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் மீண்டும் நிரம்பி உள்ளன. இதனால் இந்த அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 120 அடியை நெருங்கி மேட்டூர் அணை 2-வது முறையாக இந்த ஆண்டு நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து காவிரியாறு கடந்து வரும் மாவட்ட மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கரூர் மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காவிரியாற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள நீர் எளிதாக புக வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும். தங்கள் குழந்தைகளை ஆற்றில் குளிக்க அனுமதிக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு செல்லாதவாறும், வெள்ள நீரை வேடிக்கை பார்க்க செல்வோர் கரையோரத்தில் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்கவும் வேண்டும்.
காவிரி கரையோர பொதுமக்களுக்கு அடிப்படையான வசதிகளான உணவு, உடை மற்றும் இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெள்ள அபாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டும், தண்டோரா மூலமும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் வெள்ள நிலைமை குறித்து கரூர் மாவட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story