மாவட்ட செய்திகள்

போக்குவரத்துக்காக சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம் + "||" + Transportation to Road construction works start

போக்குவரத்துக்காக சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

போக்குவரத்துக்காக சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்
ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட உள்ளதால் போக்குவரத்துக்காக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது. பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.


இதனால் வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்படும். இதை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் மீது 480 மீட்டர் தூரத்துக்கு தரைப்பாலம் அமைத்தனர். இந்த தரைப்பாலத்தை கடந்துதான் தற்போது திருவள்ளூர், பூந்தமல்லி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

2015-ம் ஆண்டு பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கியதால் வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டது. சுமார் 60 நாட்களுக்கு பிறகு வெள்ளம் குறைந்த பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. அப்போது வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் பயண தூரம் அதிகரித்தது மட்டுமின்றி பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆனானார்கள்.

இதனை கருத்தில் கொண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அரசு உயர் மட்ட மேம்்பாலம் அமைக்க ரூ.28 கோடி ஒதுக்கியது. ஈரோட்டை சேர்ந்த நிறுவனத்துக்கு பாலம் அமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைக்க மண் தர பரிசோதனை பணிகள் முடிவடைந்துள்ளது.

மேம்பாலம் 450 மீட்டர் நீளத்தில் 11 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது. மேம்பாலம் மீது பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக இரு புறங்களிலும் நடைபாதை அமைய உள்ளது. தரை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் அமைய உள்ள பாலத்தை 21 தூண்கள் தாங்கி நிற்கும்.

மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கினால் தற்போது தரைப்பாலம் வழியாக நடந்து வரும் வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்படும். இதையடுத்து மாற்று வழியாக தரைப்பாலத்தின் அருகே புதிய சாலை அமைக்க உள்ளனர். இதற்கான பணிகள் நேற்று தொடங்கின. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.