விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது, கலெக்டரிடம் கோரிக்கை மனு


விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது, கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 11 Aug 2018 4:15 AM IST (Updated: 11 Aug 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை, பவானி பகுதிகளில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்று கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், நெடுஞ்சாலையோரமாக கேபிள் பதித்து மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பவானி, பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் மற்றும் விவசாயிகள் சிலர் ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகளிடம் இருந்து எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது? இழப்பீடு எவ்வளவு வழங்கப்படும்? போன்ற விவரங்களை தெளிவாக அறிவிக்கப்படவில்லை. எனவே நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும். மேலும், உயர்கோபுரங்கள் அமைக்காமல் கேபிள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதுவரை 3 முறை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஆனால் உரிய இழப்பீடு வழங்குவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், கேபிள் பதிக்கும் திட்டத்தை நிறைவேற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் பெருந்துறை அருகே செலம்பகவுண்டன்பாளையம், பவானி அருகே மயிலம்பாடி ஆகிய பகுதிகளில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி இன்று (நேற்று) தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே இந்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். உயர்மின் கோபுரங்கள் அமைத்தால், எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story