மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நூதன முறையில் தங்கச்சங்கிலி திருட்டு + "||" + Female The golden chain theft in the nautical manner

பெண்ணிடம் நூதன முறையில் தங்கச்சங்கிலி திருட்டு

பெண்ணிடம் நூதன முறையில் தங்கச்சங்கிலி திருட்டு
வேப்பந்தட்டை அருகே பூஜை செய்வதாக கூறி, பெண்ணிடம் நூதன முறையில் தங்கச்சங்கிலி திருட்டிய ஜோசியக்காரருக்கு போலீசார் வலைவீச்சு.
வேப்பந்தட்டை, 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லபெருமாள்(வயது 55). விவசாயி. இவருடைய மனைவி நல்லக்கண்ணு(48). இவர்கள் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது, ஒருவர் கிளி ஜோசியம் பார்ப்பதாக கூறி வந்துள்ளார். அவர், நல்லக்கண்ணுவிடம் உங்கள் மகனுக்கு நேரம் சரியில்லை. ஏற்கனவே 2 கண்டத்தில் இருந்து தப்பியுள்ளார். தற்போது அவருக்கு 3-வது கண்டம் வரப்போகிறது. இதில் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்றால் சாமிக்கு எலுமிச்சை பழம், தங்கச்சங்கிலி ஆகியவற்றை கொண்டு பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய நல்லக்கண்ணு, பூஜைகள் செய்யுமாறு கூறி, ஜோசியக்காரரிடம் 1½ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் அவர் கேட்ட பொருட்களை கொடுத்துள்ளார். பின்னர் ஜோசியக்காரர், பூஜை செய்து எலுமிச்சை பழத்திற்குள் தங்கச்சங்கிலியை வைத்திருப்பதாகவும், அதனை வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமி படத்திற்கு முன்பு வைத்து மறுநாள் காலை குளித்துவிட்டு சாமி கும்பிட்ட பின்னர் எலுமிச்சை பழத்தில் உள்ள தங்கச்சங்கிலியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். அதன்படி மறுநாள் பூஜையறைக்கு சென்று எலுமிச்சை பழத்திற்குள் பார்த்தபோது தங்கச்சங்கிலி இல்லாததை கண்டு நல்லக்கண்ணு மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஜோசியக்காரர் நூதன முறையில் தங்க சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக நல்லபெருமாள் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், நூதன முறையில் தங்கச்சங்கிலியை திருடிச் சென்ற ஜோசியக்காரரை வலைவீசி தேடி வருகின்றனர்.