அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி கண்ணம்மாள் விசாரிக்கிறார்


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி கண்ணம்மாள் விசாரிக்கிறார்
x
தினத்தந்தி 11 Aug 2018 12:00 AM GMT (Updated: 10 Aug 2018 10:53 PM GMT)

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி கண்ணம்மாள் விசாரித்து வருவதாக ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை,

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ராஜபாளையம் பகுதியில் ரூ.74 லட்சம் மதிப்பில் 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு ரூ.6 கோடி. அதேபோல் திருத்தங்கல் பகுதியில் 2 வீட்டுமனைகள், 75 சென்ட் நிலம் ஆகியவை வாங்கியுள்ளார். இந்த சொத்தின் சந்தை மதிப்பு ரூ.1 கோடிக்கு அதிகமாகும். வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ரூ.7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். எனவே அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அளிக்கப்பட்ட புகார் மனு மீதான முதற்கட்ட விசாரணை முறையாக நடக்கவில்லை. அவர் கடந்த 1996-ம் ஆண்டு திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தது முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய வருமானம், சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இதற்காக போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறையாத ஐ.பி.எஸ் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை கோர்ட்டில் அவ்வப்போது தாக்கல் செய்ய வேண்டும்‘ என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் அந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மதுரை ஐகோர்ட்டில் நேற்று மாலை விசாரித்தனர்.

அப்போது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளரும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை அதிகாரி கண்ணம்மாள் சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஏராளமான சாட்சிகளிடம் விசாரிக்க காலஅவகாசம் வேண்டும் என்றும் போலீசார் நீதிபதிகளிடம் கோரினர். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த அறிக்கையை வருகிற அக்டோபர் மாதம் தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story