மாவட்ட செய்திகள்

கண்ணன்கோட்டை நீர் தேக்கத்திற்காக 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் + "||" + Kannankottai For water stagnation Delay in acquisition of 300 acres of land

கண்ணன்கோட்டை நீர் தேக்கத்திற்காக 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்

கண்ணன்கோட்டை நீர் தேக்கத்திற்காக 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்
கண்ணன்கோட்டை நீர் தேக்கத்திற்காக 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் நெமிலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இது தவிர ஆரணி, கொசஸ்தலை ஆற்று படுகைகளில் அமைந்துள்ள சிறுவானூர், மோவூர், கீழானூர், புல்லரம்பாக்கம், காரணை மேலானூர், மாகரல், வெள்ளியூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது.


கோடைக்காலங்களில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகள் வற்றிவிடுவதால் சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ.330 கோடி மதிப்பீட்டில் நீர்தேக்கம் அமைக்கப்படும் என்று 2012-ம் ஆண்டு அறிவித்தார்.

கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளின் பரப்பளவு 600 ஏக்கர். விவசாயிகளின் பட்டா விளைச்சல் பூமி 600 ஏக்கர். 285.64 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு மற்றும் வனப்பகுதியாகும். பட்டா நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. பண அவசியம் ஏற்பட்ட சுமார் 55 சதவீத விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை ரூ.12 லட்சம் பெற்று அரசுக்கு அளித்து விட்டனர்.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யும் போது அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட 4 மடங்கு அதிகம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால் மீதம் உள்ள 45 சதவீத விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.12 லட்சம் மட்டும் போதாது ரூ.48 லட்சம் கொடுத்தால்தான் விளைநிலங்களை அளிப்போம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். கையகப்படுத்திய நிலத்தில் அரசு 2013-ம் ஆண்டு நீர்தேக்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்து சேரும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடைகளின் தண்ணீர் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்க உள்ளனர்.

அதன்படி 1 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜங்காலபள்ளியில் கிருஷ்ணா நதி கால்வாயில் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்துக்கு தண்ணீர் திருப்பிவிட மதகுகள் அமைக்கும் பணி, இந்த தண்ணீர் 7½ கிலோமீட்டர் தூரம் வரை தங்கு தடையின்றி நீர்தேக்கம் சென்றடைய கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. வாகனங்கள் வந்து செல்லும் விதமாக ஏரியின் கரைகளில் சாலை அமைக்கும் பணிகள் 70 சதவிதம் முடிந்துள்ளன.

மேலும் ஏரி நீரை சுத்திகரிக்கும் நிலையம், நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கண்ணன்கோட்டை நீர்தேக்கம் முழுவதுமாக நிரம்பினால் விவசாயிகள் பயன்பெறும் விதத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட மதகு அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. ஆனால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத சுமார் 300 ஏக்கர் நிலத்தில் இன்னும் எந்தவித பணிகளும் தொடங்க வில்லை. கோர்ட்டு அறிவித்துள்ள இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கடந்த காலங்களில் தீக்குளிப்பு போரட்டம் மற்றும் பல தொடர் மறியல் போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை.

இதனால் சென்னை நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கும் திட்டம் கானல்நீர் போன்று ஆகிவிட்டது. மேலும் நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு வேலை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இது வரை அப்படிப்பட்ட எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நிலம் வழங்கிய விவசாயிகள் தெரிவித்தனர்.

2013-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு முடிவில் நீர்தேக்க பணிகளை முடிக்க திட்டமிட்டனர். ஆனால் 300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் காணரமாக நீர் தேக்கத்தின் 30 சதவித பணிகள் முடிவடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி நீர்தேக்க பணிகள் முடிந்திருந்தால் தற்போது பெய்து வரும் பருவ மழை நீரை நீர் தேக்கத்தில் சேமித்து வைத்து சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கி இருக்க முடியும். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம், அரசு மெத்தன போக்கு காரணமாக இன்னும் 30 சதவித பணிகள் முடிவடையாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்தேக்க பணிகளுக்கு நிலம் கொடுக்காத விவசாயிகள் தத்தம் நிலங்களில் நெற் பயிரிட்டுள்ளனர்.

இந்த பயிர்களுக்கு மழைநீர் பாய்ந்து வரும் கால்வாயில் நீர் வராமல் தடுக்க அதிகாரிகள் மணல் மேடு அமைத்தனர். இதனை தடுக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டடனர். இனியாவது தமிழக அரசு நிலம் கொடுக்காத விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி நீர்தேக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.