மாவட்ட செய்திகள்

அல்லிநகரம் வழியாக பஸ்கள் இயக்காத 13 டிரைவர்கள் மீது வழக்கு + "||" + The case is filed against 13 drivers who do not operate buses

அல்லிநகரம் வழியாக பஸ்கள் இயக்காத 13 டிரைவர்கள் மீது வழக்கு

அல்லிநகரம் வழியாக பஸ்கள் இயக்காத 13 டிரைவர்கள் மீது வழக்கு
தேனி அல்லிநகரம் வழியாக இரவு நேரங்களில் பஸ்கள் இயக்காத டிரைவர்கள் 13 பேர் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி, 


தேனி புறவழிச்சாலையில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் திறக்கப்பட்ட பின்பு தேனியில் பஸ்கள் இயக்கும் வழித்தடத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பெரியகுளம் மார்க்கமாக தேனிக்கு இரவு 10 மணிக்கு மேல் வரும் அனைத்து பஸ்களும் அன்னஞ்சி விலக்கு, பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், நேரு சிலை சிக்னல், பழைய பஸ் நிலையம், மதுரை சாலை வழியாக கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால் அல்லிநகரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள், கல்லூரி மாணவிகள் இரவு நேரங்களில் பஸ் வசதி இன்றி பரிதவித்தனர்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்து வந்தனர். இதனால் இரவு நேரங்களில் அல்லிநகரம் வழியாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அல்லிநகரம் வழியாக பஸ்களை இயக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி ஓரிரு பஸ்கள் மட்டுமே அல்லிநகரம் வழியாக இயக்கப்பட்டது. பஸ் டிரைவர்கள் பலரும் இதை பின்பற்றாமல் இருந்தனர். இதையடுத்து இரவு 10 மணிக்கு மேல் பெரியகுளம் மார்க்கமாக தேனிக்கு வரும் பஸ்களை அல்லிநகரம் வழியாக இயக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவை பின்பற்றாத பஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் தேனி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அல்லிநகரம் வழியாக பஸ்களை இயக்க மறுத்த 13 டிரைவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 9 பேர் அரசு பஸ் டிரைவர்கள் ஆவார்கள்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இரவு 10 மணிக்கு மேல் அல்லிநகரம் வழியாக பஸ்கள் இயக்க வேண்டும் என்பது குறித்து அன்னஞ்சி விலக்கில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றாத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்று வழக்குப்பதிவு செய்யப்படும்’ என்றனர்.