வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி பீகாரை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது


வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி பீகாரை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 12 Aug 2018 9:45 PM GMT (Updated: 12 Aug 2018 8:31 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி, 


ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (வயது 49). விவசாயி. இவர் ஆடி அமாவாசையையொட்டி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட 2 வாலிபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து விட்டு உள்ளே சென்றனர்.

அப்போது கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்த மணிவேல், வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டினுள் இருந்து 2 பேர் வெளியே ஓடினர். இதனை கண்ட மணிவேல் கூச்சலிட்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

மேலும் இதுகுறித்து ராஜதானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் மக்கள் மடக்கி பிடித்து வைத்திருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெயர் வினோத்குமார்யாதவ் (வயது 30), அமர்குமார்யாதவ் (30) என்பதும், பீகார் மாநிலம் சுப்புவால் மாவட்டத்தில் உள்ள புல்ஹா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் நகையை பாலீஸ் செய்து தருவதாக அந்த கிராமத்துக்கு சென்று வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். மணிவேல் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர்கள் திருட முயன்றுள்ளனர். இதுதவிர பாலீஸ் போடுவதாக கூறி பலரிடம் நகை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மணிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் ஒரு பெண்ணிடம் நகை பாலீஸ் செய்து தருவதாககூறி மோசடியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story