20 ஆண்டுகளாக தண்ணீரை பார்க்காத நாட்டார் கால்வாய், விவசாயிகள் வேதனை


20 ஆண்டுகளாக தண்ணீரை பார்க்காத நாட்டார் கால்வாய், விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 12 Aug 2018 11:00 PM GMT (Updated: 12 Aug 2018 8:49 PM GMT)

20 ஆண்டுகளாக நாட்டார் கால்வாயில் தண்ணீர் வராததால் வேதனை அடைந்த விவசாயிகள் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை வைகை ஆற்றில் கிருங்காக்கோட்டை என்ற இடத்தில் இருந்து நாட்டார் கால்வாய் தொடங்குகிறது. ஆர்.புது£ர், அன்னவாசல், கிளங்காட்டூர், கரிசல் குளம்,அரிமண்டபம்,வழியாக 16 கிராமங்களை கடந்து மீண்டும் வைகை ஆற்றுடன் இணைகிறது. நாட்டார் கால்வாய் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் வழியில் உள்ள 16 கிராம பெரிய கண்மாய்கள் 25 சின்னகண்மாய்கள்,25 குளம் குட்டைகள்,மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டமும் உயரும்.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவே இல்லை. கடந்த 2 வருடங்களுக்கு முன் விவசாயிகள் 3 லட்சம் செலவு செய்து கால்வாயை தூர் வாரினர். தற்போது மீண்டும் கருவேல மரங்கள், உரச்செடிகள் உள்ளிட்ட செடிகள் வளர்ந்து கால்வாயை மறைத்து விட்டது. மேலும் நாட்டார் கால்வாயின் நடுவே ஆர்.புது£ர் சுடுகாடு அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக மாற்றப்பட்ட மின்கம்பங்கள் அமைந்துள்ளன. இதனால் தண்ணீர் செல்வது தடை பட வாய்ப்பு உள்ளது.

நாட்டார் கால்வாய் வரிசையாக ஒவ்வொரு கிராம கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து மறு கிராம கண்மாய்க்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. கண்மாய்களில் தண்ணீர் நிரம்பும்போது கண்மாய்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயர வாய்ப்புஉள்ளது.

நாட்டார் கால்வாய் செல்லும் வழியில் உள்ள கண்மாய்களில் கால்நடைகள் குடிக்க கூட தண்ணீர் இல்லை. கால்நடைகள் மேய்ப்பவர்கள் சைக்கிள்களில் குடங்களில் தண்ணீர் எடுத்துச்சென்று கால்நடைகளுக்கு வழங்குகின்றனர். நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால் இப்பாதையில் உள்ள 16 கிராமங்கள் பாலைவனமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இதுகுறித்து அப்பகுதி விவாயிகள், நாட்டார் கால்வாய் பாசன சங்க தலைவர் துபாய் காந்தி கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்து நாட்டார் கால்வாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் 16 கிராமங்களிலும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் உவர்ப்புதன்மையுடன் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆடு, மாடுகள் குடிக்க கூட தண்ணீர் இல்லை. இதனால் பெரும்பாலான மக்கள் விவசாய நிலங்களை அப்படியே விட்டுவிட்டு நகர்ப்புறங்களில் கூலி வேலைக்கு சென்று விட்டனர். ஒருசிலர் மட்டுமே சொந்த கிராமத்தை விட்டு வெளியேறாமல் உள்ளனர்.

16 கிராமங்களும் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. எனவே வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கும்போது சில நாட்கள் நாட்டார் கால்வாயிலும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை ஆற்றில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் போதுதான் நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என கூறுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக வைகை ஆற்றில் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்லவே இல்லை. மணல் குவாரி சில ஆண்டுகளுக்குமுன் அமைக்கப்பட்டதன் காரணமாக வைகை ஆற்றில் பெரும்பாலான இடங்களில் மெகா சைஸ் பள்ளங்கள் உருவானதுடன ஆறும் பள்ளமாகி விட்டது. இனி இதில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வர வாய்ப்பில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடிநீர் ஆதாரத்தை கணக்கில் கொண்டு நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story