தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, ராமநதி, கடனா நதி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
சேர்வலாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், நேற்று அணையின் நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்து இருந்தது. இந்த அணை விரைவாக நிரம்புவதால் அணையில் இருந்து நேற்று இரவில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. மேலும் ராமநதி அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீரும், கடனாநதி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
இதனால் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என்றும், கரையோரத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. நேற்று காலையில் நெல்லை, பாளையங்கோட்டை, பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெயில் அடித்தது. மதியம் 2.30 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணியளவில் மழை பெய்தது. பின்னர் சாரல் போல் அவ்வப்போது மழை தூறிக் கொண்டிருந்தது. இந்த மழையால் கலெக்டர் அலுவலகம், சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இதேபோல், அம்பை, பாபநாசம், ஆலங்குளம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story