கல்லூரி உதவி பேராசிரியர் விபத்தில் பலி மூளைச்சாவு ஏற்பட்டதால் உடல் உறுப்புகள் தானம்


கல்லூரி உதவி பேராசிரியர் விபத்தில் பலி மூளைச்சாவு ஏற்பட்டதால் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 14 Aug 2018 10:45 PM GMT (Updated: 14 Aug 2018 9:14 PM GMT)

நாமக்கல்லில் விபத்தில் சிக்கிய கல்லூரி உதவி பேராசிரியர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

நாமக்கல்,

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். அமீனாவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செல்வி. இவர்களின் மகன் பூவரசன் (வயது 27). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 11-ந் தேதி இரவு பூவரசன் கரூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாமக்கல் வந்தார். பின்னர் அவர் பரமத்தி சாலையில் நண்பர் ஒருவரை பார்க்க சென்று கொண்டு இருந்தார். நாமக்கல் சந்தைபேட்டைபுதூர் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பூவரசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததால், அவர் இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் சம்மதத்துடன் பூவரசனின் கண்கள், 2 சிறுநீரகம், கணையம், இதயம் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது. இதற்கிடையில் பூவரசன் இறந்து போனார்.

இதுகுறித்து பூவரசனின் பெற்றோர் கூறும் போது,‘எங்களது மகன் விபத்தில் இறந்து விட்டாலும், உடல் உறுப்புகளை தானம் செய்து இருப்பதன் மூலம், அவர் வாழ்ந்து வருகிறார் என்பதை நிரூபிக்கவே இதை செய்தோம்’ என்றனர்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story