ஸ்டவ் அடுப்பு வெடித்து உடல் கருகிய தம்பதி சாவு


ஸ்டவ் அடுப்பு வெடித்து உடல் கருகிய தம்பதி சாவு
x
தினத்தந்தி 15 Aug 2018 5:28 AM IST (Updated: 15 Aug 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே சமையல் செய்த போது, ஸ்டவ் அடுப்பு வெடித்து சிதறியதில் உடல் கருகி ஒரு தம்பதி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்ணாடம், 


கடலூர் மாவட்டம் பெண்ணடம் அடுத்துள்ள கொத்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் கண்ணபிரான்(வயது 32). விவசாயி. இவரது மனைவி இந்திராணி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் இந்திராணி ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஸ்டவ் அடுப்பு வெடித்து சிதறியது. இதில் இந்திராணியின் சேலையில் தீ பற்றியதால், அவர் கூச்சலிட்டார். உடன், அங்கிருந்த கண்ணபிரான் தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவர் மீதும் தீ பற்றியது. கணவன், மனைவி இருவரது உடலில் தீ பற்றி எரிந்ததால், அவர்கள் கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, தீயை அணைத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை, சிகிச்சை பலனளிக்காமல் இந்திராணியும், மாலையில் கண்ணபிரானும் உயிரிழந்தனர்.

இதுபற்றி அறிந்த அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு பிணமாக கிடந்த தம்பதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து இந்திராணியின் தந்தை நீலகண்டன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story