காவிரி, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
கர்நாடக மாநில பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணசாகர் அணை, கபினி அணை நிரம்பியது.
பவானி,
பவானி பகுதியில் வலது புறமாக காவிரி ஆறும், இடது புறமாக பவானி ஆறும் செல்கிறது. கர்நாடக மாநில பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணசாகர் அணை, கபினி அணை நிரம்பியது. இதனால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக மேட்டூர் அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டி உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
இதன் காரணமாக பவானி புதிய பஸ் நிலைய பகுதி, காவிரி வீதி, தேர்வீதி, பழையபாலம் ஆகிய பகுதிகளில் உள்ள 300–க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் ஒருசில வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்தநிலையில் தொடர்ந்து கர்நாடக மாநிலம் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டிவிட்டதால் வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இதன்காரணமாக பவானிசாகர் அணை 102 அடியை தொட்டது. இதனால் நேற்று பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. அதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் கொடிவேரி அணையும் மூழ்கியது. மேலும் பவானியில் இருந்து நாமக்கல் மாவட்டம் கொமரபாளையம் செல்லும் பழைய ஆற்றுப்பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. அந்த பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் பாலம் வழியாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பவானி பகுதியில் இடதுபுறமாக உள்ள 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் மூட்டை, முடிச்சுகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
காவிரி மற்றும் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் பவானி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் பிரபாகர், பவானி நகராட்சி ஆணையாளர் கதிர்வேல் ஆகியோர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார்கள். கலெக்டர் பிரபாகர், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் காவிரி மற்றும் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் அங்கிருந்து சத்தியமங்கலத்துக்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிட காரில் சென்றார்.