வெடிபொருட்கள் இருப்பு குறித்து தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை


வெடிபொருட்கள் இருப்பு குறித்து தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
x

பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் இருப்பு குறித்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை வாங்கி குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர். அவற்றை வைத்து கல்குவாரிகள், கிணறுகளில் உள்ள பாறைகளை தகர்த்து வருகின்றனர்.

வெடிபொருட்களை இருப்பு வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதன்படி மாவட்டம் முழுவதும் 8 குடோன்கள் உள்ளன. இதன் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தனிப்பரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:-

மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றே வெடிபொருட்கள் இருப்பு வைக்கும் குடோன்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் உரிமத்தை முறையாக புதுப்பிக்க வேண்டும். மேலும் வெடிபொருட்களை வாங்குவதற்கும், கொண்டு செல்வதற்கும் அதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகளை இருசக்கர வாகனங்கள், கார் உள்பட எந்த வாகனத்திலும் எடுத்து செல்லக்கூடாது. மேலும் கல்குவாரி, கிணற்று உரிமையாளர்களிடம் வெடிபொருட்களை கொடுக்க கூடாது.

சம்பந்தப்பட்ட கல்குவாரியில் பாறைகளை தகர்க்க வேண்டி இருந்தால், அந்த இடத்துக்கு குடோன் நடத்துபவர்களே நேரடியாக சென்று, உரிய பணியாளர்கள் மூலம் வெடிபொருட்களை பொருத்தி, பாறைகளை தகர்க்க வேண்டும். பணி முடிந்த பின்னர் மீதம் உள்ள வெடிபொருட்களை தாங்களே எடுத்துக்கொள்ள வேண்டும். எந்தெந்த கல்குவாரிகள், கிணறுகளுக்கு எவ்வளவு வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்று அவ்வப்போது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், கொள்முதல், விற்பனையின்போது எவ்வளவு வெடிபொருட்கள் இருப்பு உள்ளது? என்றும் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறுஅவர் பேசினார். 

Next Story