கிருஷ்ணகிரி அணையில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேரில் ஆய்வு


கிருஷ்ணகிரி அணையில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 17 Aug 2018 10:52 PM GMT (Updated: 17 Aug 2018 10:52 PM GMT)

கிருஷ்ணகிரி அணையை அமைச்சர் பாலகிருஷ்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையில் ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தன. அதை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கதிரவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளம்) மெய்யழகன், உதவி செயற்பொறியாளர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் பால கிருஷ்ணரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த ஆண்டு 29.11.2017 அன்று கிருஷ்ணகிரி அணையில் ஷட்டர் உடைந்தது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் உடனடியாக ரூ.30 லட்சத்தில் தற்காலிக மதகு 12 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 42 அடி உயரம் தண்ணீர் தேக்கி கடந்த ஆண்டு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது.

மேலும் நிரந்தர தீர்வு காணும் வகையில் 29 அடி உயரத்திற்கு 30 டன் எடை கொண்ட புதிய ஷட்டர் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு பணிகள் முடிந்துள்ளன. அணையின் முழு கொள்ளளவான 52 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஷட்டர்களையும் புதிதாக அமைக்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக கருத்துரு அனுப்பப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது முன்னாள் பால் வள தலைவர் தென்னரசு, முன்னாள் நகர்மன்ற தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, உதவி பொறியாளர் சையத், தாசில்தார் சேகர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஹேம்நாத் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story