மாவட்ட செய்திகள்

புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க.. + "||" + old porridge: There is more nutrition...Eat ..

புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..

புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..
காலையில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே பள்ளியை நோக்கி நடந்து செல்வார்கள். அப்போது காலை உணவை பற்றி அவர்களுக்குள் பேச்சு வரும்.
இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவு வகைகளை சாப்பிட்டேன் என்பவர்களை வசதியானவர்கள் என்றும், ‘பழங்கஞ்சியை குடித்து விட்டு வந்தேன்’ என்று சொல்பவர்களை ஏழைகள் என்றும் கருதுவது உண்டு. ஆனால் இப்போது கதையே மாறிக்கொண்டிருக்கிறது. வசதிபடைத்தவர்கள் எல்லாம் காலையிலே பழங்கஞ்சியை விரும்பி சாப்பிட்டுவிட்டு, அதன் பெருமையை நாவாற பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


பழங்கஞ்சியானது செலவற்ற உணவு. முதல் நாள் இரவில் சாப்பிட்டு முடித்து விட்டு மீதம் வரும் சாதத்தில், தண்ணீர் சேர்த்து மூடிவைத்தால் மறுநாள் காலையில் அது பழங்கஞ்சியாகி விடுகிறது. கிட்டத்தட்ட பத்து மணி நேரம் இரண்டும் ஒன்றாக கலந்து ஊறிவிடும்போது அதற்கு தனி மணமும், ருசியும் கிடைத்துவிடுகிறது. முதல் நாள் இரவில் தயாரானது என்பதால் அதன் பெயரோடு ‘பழைய’ இணைந்து விடுகிறது. இதற்கு தனியாக ‘ஸ்பெஷல்’ கூட்டு எதுவும் தேவையில்லை. கொஞ்சம் உப்பு கலந்து கொள்ள வேண்டும். நான்கு சிறிய வெங்காயம் அல்லது இரண்டு பச்சை மிளகாய் போதுமானது. சிலர் கருவாட்டை சுட்டு வைத்துக் கொண்டு வயிற்றை பழங்கஞ்சியால் நிரப்பி விடுவார்கள். விவசாயிகள் விளைநிலத்தில் கடுமையாக உழைப்பார்கள். அவர்களது உழைப்புக்கு ஏற்ற ஊக்கத்தை தரும் உணவு என்ற பெருமை பழங்கஞ்சிக்கு உண்டு.

‘அன்னத்தை வீணாக்கக்கூடாது’ என்று அந்த காலத்தில் இருந்தே சொல்லி வந்திருக்கிறார்கள். அதோடு ‘எந்த நேரத்தில் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு இல்லை என்று கூறிவிடக்கூடாது’ என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனால் தேவைக்கு சற்று அதிகமாக வீடுகளில் தாய்மார்கள் சாதம் வடித்து விடுவார்கள். அவற்றில் மீதம் வந்துவிட்டால், வீணாக்கக்கூடாது என்பதற்காக தண்ணீர் ஊற்றி (சேமித்து) பாதுகாப்பார்கள். இப்படி ஏதோ ஒரு ஆதிகாலத்து தாய் சாதத்தை பாதுகாத்ததும், பயன்படுத்தியதும்தான் பழங்கஞ்சியின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. அதில் ஒவ்வொருவரும் தங்கள் ருசிக்குதக்கபடியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மிளகாய், சிறிய வெங்காயத்தை இடித்து அதில் சேர்த்து ருசிக்கிறவர்களும் உண்டு.

பழங்கஞ்சியை விரும்புகிறவர்கள் அதற்கு எந்த பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் விரும்பும் ருசியை பெறவேண்டும் என்றால், மண்கலத்தை பயன்படுத்தவேண்டும். அதுபோல் அதை கவனமாக தயாரிக்கவும் வேண்டும். இரவு உணவு முடிந்த பின்பு மீதம் இருக்கும் சாதத்தில் குளிர்ந்த நீரை ஊற்றிவைக்கவேண்டும். ஏற்கனவே வடித்துவைத்திருக்கும் கஞ்சி நீராக இருந்தாலும் நல்லது. இரண்டு சிறு வெங்காயத்தையும், ஒரு மிளகாயையும் கல்லில் இடித்து அதில் சேர்த்து, தயிர் இருந்தால் அதையும் சற்று கலந்து விடவேண்டும். தேங்காய் ஓட்டில் செய்த அகப்பையால் கிளறிவிடுவது நல்லது. அந்த பானையை அப்படியே உறியில் தூக்கிவைத்து விடலாம். இரவு முழுவதும் அப்படியே இருந்து அது சுவையான பழங்கஞ்சியாக மாறிவிடும். இதை சாப்பிட ஆரம்பித்து விட்டால், தினமும் எத்தனைவிதமான பலகாரங்கள் இருந்தாலும், பழங்கஞ்சியே பிடித்த உணவு என்று சொல்லத் தொடங்கி விடுவீர்கள்.

பழங்கஞ்சியை பற்றி ஆராய்ச்சி செய்து அதில் இருக்கும் மருத்துவ குணங்களை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது இரவு முழுவதும் இருந்து புளித்த உணவாக மாறிவிடுவதால், அதில் சத்துக்கள் நிறைய இருக்கிறதாம். வழக்கமாக நாம் சாப்பிடும் 100 கிராம் சுடு சாதத்தில் 3.4 மி.கி. இரும்புச் சத்து உள்ளது. அதே சாதம் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறி புளிக்கும்போது அதில் 73.91 மி.கி. இரும்புச் சத்தாகிவிடும். ரத்த அழுத்தத்தை சீரமைக்கக்கூடிய பொட்டாசியமும் பழங்கஞ்சியில் இருக்கிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கான சூழலை குறைக்கும் விதத்தில் பழங்கஞ்சி செயல்படும் என்றும் சொல்கிறார்கள்.

கூலி வேலை செய்பவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் காலையில் பழங்கஞ்சி குடித்துவிட்டு வேைலக்கு சென்றால் மதியம் வரை தளர்ச்சியடையாமல் உற்சாகமாக வேலைபார்ப்பார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அன்று முழுவதும் அவர்களது உடலுக்கு அது உற்சாகமளிக்கும். சோறும், தண்ணீரும் கலந்த அந்த உணவு மூலம் சுமார் 340 கலோரி சக்தி கிடைக்கும். மூன்று இட்லி சாப்பிட்டாலும் இதே கலோரி கிடைத்துவிடும். ஆனால் சாதமும், தண்ணீரும், புளிப்புத் தன்மையும் சேர்ந்து உடலுக்கு கூடுதலாக சில சத்துக்களையும் தந்து, உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். உடலில் தண்ணீர்த்தன்மையையும் உயர்த்தும்.

எலும்புக்கு பலத்தை தரும் கால்சியம், மக்னீஷியம், செலீனியம் போன்ற சத்துக்களும் இதில் உள்ளது. உடல் வேகமாக உறிஞ்சி எடுக்கும் சத்துக்களான வைட்டமின் பி- 6, பி-12 போன்றவைகளும் இருக்கின்றன. இந்த வைட்டமின்கள் உடலுக்கு உற்சாகத்தை தரும். அதனால்தான் பழங்கஞ்சி சாப்பிட்டவர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இது ஜீரணத்தை எளிமைப்படுத்துகிறது. கூடவே அசிடிட்டி தொல்லை, அல்சர் தொல்லை போன்றவைகளையும் தடுக்கிறது. மலச்சிக்கலை தீர்க்கும் சக்தியும் இருக்கிறது.

சருமத்திற்கு பொலிவைத்தரவும், இளமையை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்களே அதற்கு காரணமாக சொல்லப்படுகி றது. சருமத்தி்ல் நெகிழ்வுத்தன்மையை உருவாக்கும் கொலேஜன் செயல்பாட்டை மேம்படுத்தும் விதமாகவும் இது செயல்படுகிறது. பழங்கஞ்சி புளித்துவிடுவதால் அதில் லாக்டிக் அமிலம் உருவாகிறது. அது தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கு, அதிக பால் சுரக்கச் செய்கிறது. பழங்கஞ்சி குளிர்ச்சிமிக்கதாக இருப்பதால் இது உஷ்ணம் தொடர்புடைய நோய்களுக்கும் நிவாரணம் தருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...