தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் மனித சங்கிலி


தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் மனித சங்கிலி
x
தினத்தந்தி 21 Aug 2018 10:45 PM GMT (Updated: 21 Aug 2018 9:59 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் 4 ரோடு வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், நீதித்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் செந்தில்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

காப்பீட்டு ஊழியர் சங்க கோட்டஇணை செயலாளர் மாதேஸ்வரன், ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பாஸ்கரன், ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கவுரன், பொன்ரத்தினம் கவிதா, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எழில், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சதீஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு துறைகளில் உள்ள 4 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுதுறைகளில் ஒப்பந்த பணி, அவுட்சோர்சிங் முறையில் பணிகளை வழங்குதல் ஆகியவற்றை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்று சுமார் 2½ கி.மீ. தூரத்திற்கு சாலையோரத்தில் நீண்டவரிசையில் நின்றனர். கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியும், கழுத்தில் அணிந்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். மனித சங்கிலி நடைபெற்ற பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் தர்மராஜா கோவில் சாலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில், அரசாணை 56 மூலம் அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். பட்டு வளர்ச்சித் துறை மாநில தலைவர் சிவபிரகாசம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் கோரிக்கை குறித்து விளக்க உரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார். 

Next Story