வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - நாராயணசாமி பேட்டி


வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 23 Aug 2018 5:30 AM IST (Updated: 23 Aug 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்திற்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்திற்கு வரவேண்டிய 7 டி.எம்.சி. காவிரி நீர், காரைக்கால் அரசலாறு, நண்டலாறு, திருமலைராயனாறு மற்றும் ஆறுகள் வழியாக வந்துகொண்டிருக்கிறது.

விகிதாச்சார முறையில், காரைக்காலுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் வரவேண்டிய அளவை விட குறைவாகத்தான் காவிரி நீர் வந்துள்ளது. செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை வரவேண்டிய நீரை, தமிழக அரசுடன் பேசி, கண்காணித்து வருகிறோம்.

காரைக்கால் அருகில் தமிழக பகுதிகளில் உள்ள ஆறுகள் முறையாக தூர்வாரப்படாமல் கிடப்பதால் காரைக் காலுக்கு காவிரி நீர் குறைவாக வருகிறது. இது குறித்து, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்.

விவசாயிகளுக்கான விதைநெல், உரம், பூச்சி மருந்தை போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும். விவசாயிகள் சிரமமின்றி விவசாயம் செய்ய உரிய உதவிகள் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மாவட்ட வாய்க்கால்களை முழுமையாக தூர்வார தேவையான நிதி ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கேரளா மழை வெள்ள பாதிப்பிற்காக புதுச்சேரி அரசு ரூ.1 கோடி வழங்கியுள்ளது. எம்.பி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் ஒரு மாத ஊதியத்தை கேட்டுள்ளோம். அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தையும், தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள், பொதுமக்களிடமிருந்தும் வெள்ள நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது. அவை வந்ததும், புதுச்சேரி அரசின் பங்காக ரூ.7 கோடி வழங்க முடிவு செய்துள்ளோம். அனைவரும் தாராளமாக வெள்ள நிவாரணம் வழங்க முன்வரவேண்டும்.

மத்தியில் மோடி பிரதமரானதும், பொருளாதார வளர்ச்சி இல்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி 10.8 சதவீதமாக இருந்தது மோடி ஆட்சியில் 6.7 சதவீதமாக உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என்ற மோடியால் அதை நிறைவேற்ற முடியவில்லை. வருகிற 2019 பாராளுமன்ற தேர்தல், பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாக இருக்கும். பாதுகாப்புத்துறை மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட யாருடைய ஆலோசனையும் இல்லாமல், பிரதமர் மோடி தன்னிசையாக ரபேல் போர் விமான ஒப்பந்தம் செய்த வகையில், இந்திய அரசுக்கு ரூ.41 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சி காலத்தில் ரூ.60 கோடி ஊழல் நடந்ததாக பொய் குற்றசாட்டை எழுப்பிய பா.ஜனதா தற்போது மிகப்பெரும் ஊழலை புரிந்துள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து, மாநில, மாவட்ட அளவில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். மேலும் ஜனாதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பப்படும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story