மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் ‘பிளாஸ்டிக் இல்லா சேலம்’ போர்டுகள் வைக்க உத்தரவு


மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் ‘பிளாஸ்டிக் இல்லா சேலம்’ போர்டுகள் வைக்க உத்தரவு
x
தினத்தந்தி 31 Aug 2018 10:15 PM GMT (Updated: 31 Aug 2018 6:37 PM GMT)

சேலம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் இல்லா சேலம் என்ற போர்டுகள் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கப் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அனைத்து டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி பார்களில் பிளாஸ்டிக் கப் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என டாஸ்மாக் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், ‘பிளாஸ்டிக் இல்லா சேலம்’ என்ற இலக்கை அடையும் வகையில் அனைத்து டாஸ்மாக் பார்களிலும் விழிப்புணர்வு போர்டுகள் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களின் உரிமையாளர்களுக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம், ‘பிளாஸ்டிக் இல்லா சேலம்’ என்ற போர்டுகளை வழங்கினார். அனைத்து பார்களிலும் இந்த போர்டு வைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் 138 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில கடைகளை தவிர மற்ற கடைகளில் மட்டுமே பார் உள்ளது. தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் இது நடைமுறைக்கு வந்துள்ளது. அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் கப் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அனைத்து பார்களில் போர்டுகள் வைக்க உத்தரவிட்டுள்ளோம், என்றார்.

Next Story