தயாரானால் தரணி ஆளலாம்!


தயாரானால் தரணி ஆளலாம்!
x
தினத்தந்தி 1 Sep 2018 7:34 AM GMT (Updated: 1 Sep 2018 7:34 AM GMT)

வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி பெறத் தவறியவர்களுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.

தங்களை தயார்ப்படுத்தியவர்கள் வென்றனர், மற்றவர்கள் வெற்றியை இழந்தனர்.

இந்த விஷயத்தை விளையாட்டு வீரர்களிடம் இருந்து நாம் அறியலாம். ஓட்டப்பந்தய உலக நாயகன் உசேன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்கள் வென்றிருக் கிறார்.

அவர் ஒலிம்பிக்கில் ஓடியது மொத்தமாகவே இரண்டு நிமிடங்களுக்கும் குறைவு. மிகச் சரியாகச் சொல்வதென்றால், 115 வினாடிகள்! கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு வினாடிக்கும் அவர் தலா ரூ. 20 கோடியை பரிசாகப் பெற்றார்.

ஆனால் இந்த 115 வினாடி ஓட்டத்துக்கு உசேன் போல்ட் எத்தனை மணி நேரங்கள், எத்தனை மாதங்கள், எத்தனை ஆண்டுகள் தன்னைத் தயார்ப்படுத்தி இருப்பார்?

எத்தனை நாட்கள் சூரியன் எழுவதற்கு முன் எழுந்திருந்திருப்பார்? எத்தனை நாட்கள் தசைகளை வலுவாக்க எடைப் பயிற்சி செய் திருப்பார்? எத்தனை முறை காயம்பட்டு அவதிப்பட்டிருப்பார்? எத்தனை போட்டிகளில் பங்கேற்றிருப்பார்? எத்தனை நாட்கள் விருப்பமான உணவைத் தவிர்த்திருப்பார்?

இவை அனைத்தும் அவர் தனது சாதனை களுக்குக் கொடுத்த விலை, தியாகம்! தியாகத்தால் மட்டுமே பெரிய சாதனைகள் சாத்தியமாகும்.

ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி தரும் இந்திய மிலிடரி அகாடமியில் இளம் அதிகாரிகளை பல மணி நேரம் ஓட விடுவார்கள். ஓடுவது என்றால், சும்மா ஓடுவது அல்ல. கையில் கனமான ரைபிள், முதுகில் 5 கிலோ மூட்டையைச் சுமந்துகொண்டு ஓட வேண்டும்.

வியர்த்துக் கொட்டும், கண்கள் இருட்டும். அப்போது தண்ணீர் கூட கொடுக்கப்படாது.

அந்த கமாண்டோ பயிற்சியை நானும் எடுத்துள்ளேன். எனவே அது எவ்வளவு கடினம், எவ்வளவு வலி மிக்கது என்று எனக்குத் தெரியும்.

ஆனால் அங்கு சொல்லப்படும் மந்திர வார்த்தை என்ன தெரியுமா?

‘கவாத்து மைதானத்தில் அதிகம் வியர்வை சிந்தினால் சண்டைக் களத்தில் குறைவாக ரத்தம் சிந்தும்’.

நாம் ஏதாவது ஒரு கலையில் சிறந்து விளங்க வேண்டும். எழுதுதல், பேசுதல், ஓவியம் வரைதல், சமையல், விமானம் ஓட்டுதல், அறுவைசிகிச்சை, கணினி நிரல் எழுதுதல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

ஆனால் இதெல்லாம் எளிதில் ஒருவருக்குக் கைவந்துவிடாது.

ஒரு விஷயத்தை அற்புதமாகக் கற்றுக்கொள்ள ஒருவருக்கு 10 ஆயிரம் மணி நேரம் தேவைப்படும் என்கிறார், மால்கம் கிளாட்வெல் என்ற எழுத்தாளர். அவர், ‘அவுட்யா’ என்ற நூலின் வழியாக இந்தக் கோட்பாட்டை உலகுக்கு எடுத்துக்கூறினார். ஆண்டர்ஸ் எரிக்சன் என்ற உளவியல் அறிஞரின் ஆராய்ச்சியின் முடிவுதான் இது. எந்த ஒப்பற்ற திறமைக்கும் ஓர் ஒப்பற்ற தயார்ப்படுத்துதல் அவசியம். அதற்கு பல மணி நேரங்களை முதலீடு செய்ய வேண்டும்.

எதற்காக தயார்ப்படுத்துதல்? தயார்ப்படுத்திக்கொள்ளாமல் ஒரு செயலில் இறங்கினால் என்ன கெட்டுவிடும்?

விண்வெளிக் கலங்களை வான்வெளியில் செலுத்தும்போது எவ்வளவு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டிருப்பார்கள்? அதற்கான ஆயத்தப் பணியில் ஒவ்வோர் உபகரணத்தையும் எத்தனை முறை சரிபார்த்திருப்பார்கள்?

அப்படிப்பட்ட நிலையிலும், அமெரிக்காவின் ‘சேலஞ்சர்’ விண்கலம், 1986-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி விண்ணில் உயர்ந்த 73 வினாடிகளில் வெடித்துச் சிதறியது.

விண்வெளி வீரர்களை மகிழ்வோடும் பெருமையோடும் வழியனுப்ப வந்த உறவினர்கள் முன்னிலையில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது. ஏழு விண்வெளி வீரர்களும் கருகிப் போய் அட்லாண்டிக் கடலில் காணாமல் போனார்கள். மிகப் பெரிய இத்திட்டம், மிகப் பெரும் சோகமாக முடிந்தது.

இவ்விபத்தை புலன் விசாரணை செய்த ஹென்றி பேமன், நோபல் பரிசு பெற்ற அறிஞர். ஒரு வட்ட வடிவ வளையத்தால் இந்த விபத்து ஏற்பட்டது என்று அவர் அறிவித்தார். குறிப்பிட்ட வளையம், அன்றைய தினத்தின் கடுங்குளிரை தாங்கமுடியாமல் பழுதடைந்ததால் விபத்து நேர்ந்திருக்கிறது.

தயார்ப்படுத்தும் வேளையில் நடந்த மிகச் சிறிய தவறு. அதனால் நிகழ்ந்ததோ, பேராபத்து.

ஒரு செயலைச் செய்வதற்கு முதலடியை எடுத்து வைத்தாலே அது பாதி வெற்றிதான்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கல்லூரியில் படிக்கும்போதே ஓர் இயக்கமுறைமையை (Operating System) ஏற்படுத்த முயன்றார்.

1970-ல் மைக்ரோசாப்ட் கம்பெனியை நிறுவிய அவர், 1985-ம் ஆண்டு ‘விண்டோஸ்’ இயக்கமுறைமையை வெளியிட்டார். 2009-ல் உலகின் ‘நம்பர் 1’ பணக்காரர் ஆனார்.

அந்த 20 ஆண்டுகளில் நடந்தது என்ன? அவருடைய தயார்ப்படுத்தல்தான்.

அப்படி ஒருவர் தன்னை தயார்ப்படுத்தத் தவறுகிறார் என்றால், அவர் தோல்வியைத் தழுவ தன்னைத் தயார்ப் படுத்துகிறார் என்று அர்த்தம்.

எப்போது நம்மை தயார்ப் படுத்துகிறோம் என்பது முக்கியம். மழைக்காலத்துக்கு முன்பே குடையைத் தயார்ப் படுத்த வேண்டும். மீன்பிடிக் காலத்துக்கு முன்பே படகைப் பழுது பார்க்க வேண்டும். அறுவடைக் காலத்துக்கு முன்பே விவசாயக் கருவிகளை சரிசெய்ய வேண்டும். நோய் நம்மை இறுக அணைத்துக்கொள்ளும் முன்பே உடற்பயிற்சி செய்து உடலை உறுதிப்படுத்த வேண்டும்.

இன்றைய வேலையை ஒழுங்காகச் செய்து முடிப்பதையே நாளைக்கான சிறந்த தயார்ப்படுத்தல் என்று கூறிவிடலாம்.

ஒரு பொறுப்புக்கு வந்தபிறகும் கூட நம்மைத் தயார்ப்படுத்துவதை நிறுத்திவிடக் கூடாது. அந்த வேலையில் பதவி உயர்வு பெற என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் என்பதற்குப் பயிற்சி எடுக்க வேண்டும்.

மொழித்திறமை, சிந்தனைத் திறமை, ஞாபக சக்தி, மனித உறவு திறமை, எழுதும் திறமை, பேச்சுத் திறமை, பொருளாதாரத் திறமை என்று சுயபயிற்சியால் நம்மைச் செறிவூட்டிக்கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். உடலை நல்ல உறுதியோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு காலை 5 மணிக்கு எழுந்து ஓட மனதிருக்காது.

இந்த மனமின்மையால்தான், பலருக்கும் தாங்கள் நினைத்த வெற்றியை அடைய முடியாமல் போகிறது. வெற்றிக்கான ரகசியங்களில் முக்கியமானது தயார்செய்தல்தான்.

உங்களை தயார் செய்யும் பணியைத் துவங்கும் முன், தற்போது நீங்கள் எங்கே நிற் கிறீர்கள் என அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கான வெற்றிப் படிக்கட்டுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும்...

இந்த வெற்றிப் படிக்கட்டுகளில் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களைத் தயார்ப்படுத்த வேண்டும். இது வேண்டாம் என்று சொல்ல, ‘என்னால் முடியாது’ என்பது காரணமாக இருக்கிறது.

என்னால் முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள் என்றால், அதற்கான முயற்சியை எடுக்க உங்களுக்கு மனதில்லை அல்லது உங்களுக்குத் திறமை இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள். அதை முறியடிக்க முதலில் ஒரு சிறிய சாதனையை நிகழ்த்த வேண்டும்.

‘நீட்’ தேர்வில் வெற்றி பெறும் தன்னம்பிக்கை வர வேண்டும் என்றால், பனிரெண்டாம் வகுப்பில் உயிரியல் பாடத்தில் ஒரு மாதத் தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுத்துவிட வேண்டும். அடுத்த மாதம் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் வாங்கிக் காட்ட வேண்டும்.

உங்களுக்கு இப்போது ஒரு புது நம்பிக்கை பிறக்கும். தங்களை நல்ல வழியில் தயார்ப்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே தன்னம்பிக்கை பிறக்கும். அப்படி தயார் செய்யாதவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

(வெல்லலாம்...) 

Next Story