குன்னூரில் அரசு கட்டிடத்தில் செயல்பட்ட தனியார் ஓட்டலுக்கு சீல்
குன்னூரில் அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஓட்டலுக்கு ‘சீல்‘ வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
குன்னூர்,
குன்னூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஓட்டல் மற்றும் 26 கடைகள் செயல்பட்டு வந்தன. அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்துவிட்டதால், கடைகளை காலி செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நகராட்சி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த மாதம் 28–ந் தேதிக்குள் காலி செய்ய ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஓட்டல் மற்றும் 2 கடைகள் மட்டும் காலி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று குன்னூர் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி தலைமையிலான அதிகாரிகள் திடீரென பஸ் நிலைய பகுதிக்கு சென்றனர். பின்னர் வணிக வளாக கட்டிடத்தில் செயல்படும் ஓட்டலுக்கு சென்ற அதிகாரிகள் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்து வைத்தனர். இதையடுத்து மின் இணைப்பை துண்டித்துவிட்டு, ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். அதேபோன்று மற்ற 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை வெளியேற்றி ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.