பரமத்திவேலூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு


பரமத்திவேலூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 4 Sept 2018 4:15 AM IST (Updated: 4 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 299 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செல்லப்பம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- செல்லப்பம்பட்டி பிர்காவிற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள விவசாயிகள் கடந்த 2016-17-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்து, அதற்கான பிரிமிய தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் செலுத்தினோம். ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி புதுச்சத்திரம் பிர்காவுக்கு மட்டும் இன்சூரன்சு நிறுவனத்தில் இருந்து காப்பீட்டு தொகை ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

செல்லப்பம்பட்டி பிர்காவில் உள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இப்பகுதியில் வங்கியில் பிரிமியம் செலுத்திய ஒருசில விவசாயிகளுக்கு மட்டும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காப்பீட்டு தொகை கிடைக்க பெற்றது. ஏஜெண்டுகளிடம் செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை காப்பீட்டு தொகை கிடைக்க பெறவில்லை. இதை உடனடியாக விசாரணை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

பரமத்திவேலூர் தாலுகா திடுமல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவரங்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரின் சார்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிலம் ஒதுக்கி கொடுத்தோம். அந்த நிலத்தில் தற்போது கட்டிடம் கட்டி முடிந்து விட்டது. இந்த நிலையில் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் அங்கன்வாடி கட்டிடம் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். எனவே நாங்கள் அவரிடம் தட்டி கேட்க சென்றோம். அப்போது அவர் எங்களை தரக்குறைவாக பேசினார். எனவே தாங்கள் எங்களுக்கு பாதுகாப்பு அளித்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Next Story