மாவட்ட செய்திகள்

அமராவதி ஆற்று உபரிநீரை தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு + "||" + Amaravathi river surplus to be brought to the Dadambalayam lake at the Collector's office

அமராவதி ஆற்று உபரிநீரை தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

அமராவதி ஆற்று உபரிநீரை தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கரூர் அமராவதி ஆற்று உபரிநீரை தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் குடிநீர்பிரச்சினை, தெருவிளக்கு பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி நேரடியாக மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) சாய்புதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அதிகாரி குமரேசன், மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மீனாட்சி ரமேஷ் தலைமையில் மாநில துணை பொது செயலாளர் சக்திநடராஜன், மாநில விவசாய அணி செயலாளர் கொங்கு முத்துசாமி, இளைஞரணி செயலாளர் கவுதம், மகளிரணி செயலாளர் வளர்மதி உள்ளிட்டோர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், அரவக்குறிச்சி தாலுகா பவித்திரம் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் தாதம்பாளையம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அமராவதி ஆற்றிலிருந்து மழைக்காலங்களில் வரும் உபரிநீரை கொண்டு சென்று நிரப்பும் திட்டம் பொதுப்பணித்துறையினரால் பரிசீலிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனை நிறைவேற்றுவதன் மூலம் தாதம்பாளையம் ஏரிக்கு நீர்வரத்து இருப்பதோடு, அப்பகுதியிலுள்ள 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கரூர் நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் வழி கிடைக்கும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் ரியாய்தீன் ஹசனி தலைமையில் தலையறிப்பட்டி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், அரவக்குறிச்சி தாலுகா இனங்கனூர் ஊராட்சி தலையறிப்பட்டி கிராமத்தில் தொடக்கப்பள்ளியின் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாகியும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் எங்கள் பகுதி மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த தொடக்கப்பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோருக்கு உதவித்தொகை கிடைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். மேலும் சிறுபான்மையினருக்கான தொழில்கடன், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடவூர் தாலுகா சிந்தாமணிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நிலஆக்கிரமிப்பு தொடர்பாக மனு கொடுத்து விட்டு சென்றனர். கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்த பெரியசாமி(வயது 47) அளித்த மனுவில், நான் ஒரு தனியார் நிதிநிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் வாங்கினேன். அதற்குரிய பணத்தை தவணை முறையில் செலுத்தி வருகிறேன். இந்த நிலையில் அந்த தனியார் நிதிநிறுவன உரிமையாளர் உள்பட 7 பேர் சேர்ந்து எனது வீட்டிற்கு வந்து மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி எடுத்து சென்று விட்டனர். அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புன்னம் அருகே குட்டக்கடையை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், குட்டக்கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆலாம்பாளையம் செல்லும் சாலையில் வரிசையாக மின்கம்பங்கள் அமைந்துள்ளன. இதில் ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட முதல் தெருவிளக்கிலிருந்து சிறிது தூரம் கடந்து தான் மற்ற தெருவிளக்குகள் உள்ளன. இடைப்பட்ட பகுதியில் தெருவிளக்குகள் பொருத்தப்படாததால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்டோர் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே இங்கு தெருவிளக்குகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.