ராமநாதபுரத்தில் மெகா லோக் அதாலத்தில் 3 ஆயிரம் வழக்குகளை முடிக்க திட்டம் - நீதிபதி கயல்விழி தகவல்
ராமநாதபுரத்தில் வருகிற 8–ந்தேதி நடைபெற உள்ள மெகா லோக் அதாலத் நிகழ்ச்சியில் நிலுவையில் உள்ள 3 ஆயிரம் வழக்குகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி கயல்விழி தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி கயல்விழி நிருபர்களிடம் கூறியதாவது:– உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவின்படி மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 8–ந்தேதி தேசிய மெகாலோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள 12 ஆயிரத்து 409 வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு மோட்டார் வாகன விபத்து வழக்குகள், உரிமையியல் வழக்குகள், வங்கி காசோலை வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் என மொத்தம் 1,904 வழக்குகளும், நீதிமன்ற வழக்குகள் மற்றும் வழக்கிற்கு முந்தைய நிலையில் உள்ள வங்கி வழக்குகள் 970 என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை வரும் லோக் அதாலத் நிகழ்ச்சியில் சமரசம் செய்து வைத்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டு அதற்கான முன் அமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக இதுவரை 20 முன் அமர்வு மக்கள் நீதிமன்றங்கள் கோர்ட்டுகளில் நடத்தப்பட்டு அவற்றில் 65 வழக்குகளில் இதுவரை சமரசம் காணப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.
அதன் தொடர்ச்சியாக லோக் அதாலத்தில் 13 அமர்வுகள் நடத்தப்பட்டு மொத்தம் 3 ஆயிரம் வழக்குகளை முடித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோர்ட்டுகளில் வழக்கு நடந்து கொண்டிருந்தாலும், காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இருதரப்பினரும் சமரசம் செய்து கொள்ள மன ஒற்றுமை ஏற்பட்டால் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு கொடுத்து வழக்கினை முடித்து கொள்ளலாம்.
இந்த லோக் அதாலத்தில் முடித்து வைக்கப்படும் வழக்குகளை மேல்முறையீடு செய்ய முடியாது. எனவே அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார். அப்போது சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சப்–கோர்ட்டு நீதிபதி ராமலிங்கம் உடனிருந்தார்.