தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதால் ஆடைகளின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் - டெக்ஸ்டைல் கமிட்டியின் இயக்குனர் தகவல்
திருப்பூரில் உள்ள தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதால் ஆடைகளின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று கருத்தரங்கில் டெக்ஸ்டைல் கமிட்டியின் இயக்குனர் கார்த்திகேய் தண்டா கூறினார்.
திருப்பூர்,
மத்திய ஜவுளித்துறையின் டெக்ஸ்டைல் கமிட்டி மற்றும் திருப்பூர் நிப்ட்–டீ கல்லூரி சார்பில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நேற்று மாலை திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை தாங்கினார். சிம்கா தலைவர் விவேகானந்தன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், நிப்ட்–டீ கல்லூரி முதன்மை செயல் அதிகாரி பெரியசாமி மற்றும் தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் டெக்ஸ்டைல் கமிட்டியின் இயக்குனர் கார்த்திகேய் தண்டா பேசியதாவது:–
மத்திய ஜவுளித்துறையின் ஒரு அங்கமாக டெக்ஸ்டைல் கமிட்டி செயல்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் வந்து பின்னலாடை தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள் திறன் மேம்பாடு அடைந்திருக்கிறார்கள். பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். அண்டை நாடுகளுடன் போட்டியை சமாளித்து ஜவுளி தொழில் செய்ய வேண்டியிருக்கிறது. சில நாடுகளில் இந்தியாவை விட மிக குறைந்த விலைக்கு ஆடைகளை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்.
ஆடைகளின் உற்பத்தி செலவை நாம் குறைப்பதன் மூலமாகவே இந்த போட்டியை நாம் சமாளிக்க முடியும். திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதன் மூலமாக ஆடைகளின் உற்பத்திக்கு ஆகும் செலவை குறைத்து உற்பத்தியை அதிகரித்து தரமான ஆடைகளை நாம் உருவாக்க முடியும். திருப்பூர், கோவை, லூதியானா, டெல்லி போன்ற நகரங்களில் திறன்மேம்பாட்டு பயிற்சியை அளித்து வருகிறோம். மத்திய அரசின் மானியத்துடன் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விரும்புபவர்கள் நிப்ட்–டீ கல்லூரியில் பதிவு செய்து கொள்ளலாம். விரைவில் மானியத்துடன் ‘சமர்த்’ என்ற திட்டத்தின் மூலமாக மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.