இந்த காரின் விலை 339 கோடி ரூபாய்
காரின் விலை 339 கோடி ரூபாய். விலையைக் கேட்டவுடன் மயக்கம் வருகிறதா?, உண்மைதான் இதை நம்பித்தான் ஆக வேண்டும்.
கலிபோர்னியாவில் சோத்பி நிறுவனம் நடத்திய ஏலத்தில்தான் இந்த அளவிற்கு கார் ஏலம் போயிருக்கிறது. மற்றொரு அதிர்ச்சியும் இதில் உள்ளது. இது புத்தம் புதிய கார் அல்ல. 1962-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பெராரி 250 ஜி.டி.ஓ. ரேஸ் மாடல் கார்தான் இது.
பழமையான கார் இந்த அளவிற்கு ஏலம் போனது இதுவே முதல் முறை என்று சோத்பி நிறுவனமே குறிப்பிட்டுள்ளது. 4 கோடி டாலருக்குத்தான் ஏலம் போகும் என்று இந்நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் இந்த கார் 4.84 கோடி டாலருக்கு ஏலம் போனதாம்.
இதற்கு முன்பு, 1963-ம் ஆண்டு மாடல் இதே ரகக் கார் 2014-ல் ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தக் கார் 3.81 கோடி டாலருக்கு ஏலம் போனது. இதுவரை இதுவே மிக அதிக தொகைக்கு ஏலம் போன காராக இருந்தது. ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் அந்த சாதனையை பெராரி 1962-ம் ஆண்டு மாடல் கார் முறியடித்துள்ளது.
இந்த காரின் உரிமையாளர் கிரெக் விட்டென். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர். இந்தக் காரை அவர் 2000-வது ஆண்டு வாங்கியுள்ளார். ஆனால் அவர் எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் அப்போது பெராரி காரின் சந்தை மதிப்பு ஒரு கோடி டாலராக இருந்தது என்று கணிக்கப்படுகிறது.
1953-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரையான காலத்தில் பெராரி நிறுவனம் 36 மாடலில் பந்தயத்திற்கான கார்களை தயாரித்து விற்பனை செய்தது. இந்த கார்கள் மட்டும்தான் பழங்கால (புராதன) கார்களாக இப்போதும் போற்றி பாதுகாக்கப்படுகின்றன. இவைதான் சமீபகாலமாக அதிக தொகைக்கு ஏலம் போகின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் 1963-ம் ஆண்டு மாடல் பெராரி கார் ஒன்று 7 கோடி டாலருக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது அதிகாரபூர்வமானதல்ல.
‘ஓல்ட் ஈஸ் கோல்ட்’ என்பார்களே அது இதுதானோ.
Related Tags :
Next Story