புதுச்சேரி நகர அமைப்பு குழும அலுவலகத்தில் நாராயணசாமி திடீர் ஆய்வு
கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து புதுவை நகர அமைப்பு குழும அலுவலகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடியில் புதுவை நகர அமைப்பு குழும அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தான் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி பெற வேண்டும். ஆனால் இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அனுமதி பெற முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு அதிகாரியின் டேபிளில் இருந்து மற்றொரு அதிகாரியின் டேபிளுக்கு கோப்புகள் செல்ல அதிக கால தாமதம் ஏற்பட்டது. இதற்கு அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்பதே காரணம் என கூறப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கோப்புகள் ஒரு அதிகாரியிடம் இருந்து மற்றொரு அதிகாரியின் டேபிளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இது குறித்து நகர அமைப்பு குழும தலைவர் ஜெயமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர். உடனே அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தார். ஆனாலும் தற்போது அந்த அலுவலகத்தில் 56 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் 19 பேர் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். இதையே காரணம் காட்டியே லஞ்சம் தராதவர்களின் கோப்புகள் தாமதப்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நகர அமைப்பு குழும தலைவர் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. ஆள் பற்றாக்குறை குறித்து துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை திடீரென எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள நகர அமைப்பு குழும அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அங்குள்ள கோப்புகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் சரியாக இருந்தால் மக்களை அலைக்கழிக்காமல் கட்டிடம் கட்டுவதற்கான உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த ஆய்வின்போது அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி நகர அமைப்பு குழும தலைவர் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து நகர அமைப்பு குழும தலைவர் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., கூறியதாவது:–
நகர அமைப்பு குழும அலுவலகத்தில் மொத்தம் 56 பணியிடங்கள் உள்ளது. ஆனால் தற்போது 19 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 37 இடங்கள் காலியாக உள்ளது. அதேசமயம் இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 பேர் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் அனுமதி தருவதற்கு தாமதம் ஏற்படுகிறது. எனவே இங்கு ஆய்வு செய்த முதல்–அமைச்சர் மற்றும் துறை அமைச்சரிடம் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் அதுவரை பொதுப்பணித்துறையில் இருந்து இளநிலை பொறியாளர் உள்ளிட்டோரை தற்காலிகமாக இந்த துறைக்கு வழங்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதன்பின்னர் விண்ணப்பங்களை விரைவாக சரிபார்த்து அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.