கடையநல்லூர் அருகே நகை, பணத்துடன் இளம்பெண் கடத்தல் உறவினர்கள் 3 பேருக்கு வலைவீச்சு
கடையநல்லூர் அருகே நகை, பணத்துடன் இளம்பெண்ணை கடத்தியதாக உறவினர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடையநல்லூர்,
கடையநல்லூர் அருகே நகை, பணத்துடன் இளம்பெண்ணை கடத்தியதாக உறவினர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமணம்நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகள் கார்த்திகை ஜோதி (வயது 23). பட்டதாரியான இவருக்கும், சிவகாசியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 12–ந் தேதி (புதன்கிழமை) திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் மும்முரமாக செய்து வந்தனர்.
சம்பவத்தன்று வடிவேல், திருமண பத்திரிகைகள் கொடுக்க தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது கார்த்திகை ஜோதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் வடிவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கார்த்திகை ஜோதியை காணவில்லை.
கடத்தல்உறவினர் வீட்டில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் உள்ள பீரோவை பார்த்தபோது அங்கு இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.48 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. கார்த்திகை ஜோதி நகை, பணத்துடன் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து வடிவேல் தனது உறவினர்களான குமந்தாபுரத்தை சேர்ந்த செல்வம், அவருடைய மனைவி சிவகாமி மற்றும் அவருடைய மகன் சூர்யா (23) ஆகியோர் கார்த்திகை ஜோதியை கடத்தி சென்றுவிட்டதாக கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் கார்த்திகை ஜோதியை கடத்தி சென்றதாக சூர்யா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.