விநாயகர் சிலை ஊர்வலப்பாதையை ஆய்வு செய்ய வேண்டும்
விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் பாதையை ஆய்வுசெய்ய அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் விநாயகர்சதுர்த்திவிழா கொண்டாடுவது தொடர்பான வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விநாயகர்சதுர்த்தியின்போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாமலும், மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், அரசின் வழிமுறைகளை பின்பற்றியும் விநாயகர்சிலைகளை வைத்து விழாநடத்திட வேண்டும். அரசு விதிமுறைகளின்படி களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
விநாயகர் சிலைகள் செல்லும் ஊர்வலப்பாதையில் சாலைகள் பழுதில்லாமலும், உயர்மட்ட மின்சார கம்பிகள் தாழ்வாக செல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலை கரைக்கும் இடத்தில் மின்சார வசதி, அவசர மருத்துவ குழுக்கள், தீயணைப்பு வீரர்கள் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். இதற்கான ஆய்வு பணிகளை நாளையே (இன்று) மேற்கொள்ள வேண்டும்.
விநாயகர் சிலைகள் 10 அடி உயரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். சிலைகள் வைக்கப்பட்டதில் இருந்து 5 நாட்களுக்குள் சிலைகளை கரைப்பதற்கு விழாக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்வலங்கள் பகல் 12 மணிக்குள் தொடங்கப்பட்டு, காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில், பிற மதத்தினரின் வழிபாட்டு தலங்களை கடக்காத வகையில் சென்று நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்கவேண்டும்.
சிலைகள் கரைக்கும் இடத்தில் உள்ள தண்ணீரின் தரம் குறித்து சிலை கரைப்பதற்கு முன், சிலை கரைப்பின்போது மற்றும் சிலை கரைத்தபின் என 3 முறை மாசுக்கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். சிலைகள் கரைக்கும் இடத்தில் தீயணைப்புத்துறையினர் மிதவைகள் ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் மேகராஜ், பிரியங்காபங்கஜம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சண்முகநாதன் மற்றும் தாசில்தார்கள், துணைபோலீஸ் சூப்பிரண்டுகள், தீயணைப்பு துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story