அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த டிரைவர் அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் வேல் முருகன் (வயது 40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வால்பாறை கிளையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தி.மு.க. தொழிற்சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். கடந்த மாதம் நடந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் வேல்முருகன் பங்கேற்றார். இதனால் அவர் மேட்டுப்பாளையம் கிளைக்கு இடமாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வேல்முருகன் தனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வால்பாறையில் பணியாற்ற அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் போக்குவரத்து கழக நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த வேல்முருகன் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்தார். நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு இருந்த அவர் திடீரென்று தான் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த பணிமனை காவலர்கள் மற்றும் போலீசார் அவரிடம் இருந்த தீப்பெட்டியை பறித்து அவரை காப்பாற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அறிவுரை கூறியும், எச்சரித்தும் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story