திருப்பாலைக்குடி, கன்னிராஜபுரத்தில் பேரிடர் பாதுகாப்பு
திருப்பாலைக்குடி மற்றும் கன்னிராஜபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப் புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டார்.
ராமநாதபுரம்,
மத்திய அரசின் கீழ் ஐதராபாத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களில் சுனாமி போன்ற இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்களை முன்னறிவிப்பு செய்து வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி கிராமத்திலும், கடலாடி தாலுகா கன்னிராஜபுரம் ரோச்மா நகரிலும் சுனாமி பாதுகாப்பு குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு மூலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு பேக்ஸ் மூலமாக சுனாமி குறித்து முதற் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து வருவாய் கோட்டங்களில் உள்ள நோடல் அதிகாரிகளான பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன் ஆகியோருக்கு வி.எச்.எப். கருவி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகளுக்கு பேரிடர் கால முதன்மை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் இருக்கும்படி உஷார்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, காலை 8.45 மணிக்கு இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு மூலம் 2-ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அந்த 2 கிராமங்களிலும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான வாகனங்கள், மீட்பு உபகரணங்கள் உள்பட அனைத்தையும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் காலை 9 மணியளவில் 3-ம் கட்ட சுனாமி எச்சரிக்கையாக இந்தியாவின் கடற்கரை பகுதிகளுக்கு விடுக்கப்பட்டதை தொடர்ந்து அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டது.
இறுதியாக காலை 9.15 மணியளவில் 4-ம் கட்ட எச்சரிக்கையாக ‘ரெட் அலார்ட்‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டு திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் பல்நோக்கு புயல்காப்பக மைய கட்டிடத்திலும், ரோச்மா நகர் கிராம பொதுமக்கள் அந்த ஊரில் உள்ள தேவாலயத்திலும் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட நோடல் அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் இந்திய கப்பற்படையும், ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது. மீட்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் அந்தந்த கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:- சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுக்க இயலாது. இருப்பினும் இத்தகைய இயற்கை பேரிடர் ஏற்படும் போது முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றினால் பொதுமக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும். இத்தகைய மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய கப்பற்படை, வருவாய்த்துறை, பொது சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட 12 துறைகளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றிடும் விதமாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்திய கப்பற்படை அதிகாரி விஜய்சிங், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கீழக்கரை ரவிச்சந்திரன், திருவாடானை விஜயகுமார், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர்கள் சாயல்குடி லிங்கம், ஆர்.எஸ்.மங்கலம் அருளானந்து உள்பட சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story