ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, பொதுமக்கள் குற்றச்சாட்டு


ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Sept 2018 4:00 AM IST (Updated: 8 Sept 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டாமல் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஊட்டி,

ஊட்டி நகரில் காட்டெருமை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 3–ந் தேதி ஊட்டி பழைய அக்ரஹாரம் குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமை ஒன்று புகுந்தது. பின்னர் இரவு நேரத்தில் அந்த காட்டெருமையை தாவரவியல் பூங்காவின் மேல்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் மீண்டும் அதே காட்டெருமை ஆரணி ஹவுஸ் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். ஆனால் அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதிகளிலேயே உலா வந்தது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி மிஷினெரி ஹில் செல்லும் சாலையில் உள்ள நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்துக்குள் அந்த காட்டெருமை புகுந்தது. பின்னர் அங்குள்ள புற்களை மேய்ந்து விட்டு, மரத்தடியில் படுத்து ஓய்வு எடுத்தது. அந்த காட்டெருமையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும், வனப்பகுதிக்குள் விரட்டுவதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

ஆனால் கேரட், அரிசி கஞ்சி போன்றவற்றை உணவாக கொடுக்கின்றனர். இந்த உணவுக்கு பழக்கப்படும் காட்டெருமை இனிமேல் வனப்பகுதிக்குள் செல்ல விரும்புவது இல்லை. எனவே வனத்துறையினர் உணவு கொடுப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து ஊட்டி நகர மக்கள் கூறியதாவது:–

ஊட்டியை சுற்றி வனப்பகுதிகள் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் இருந்து ஊட்டி நகருக்குள் காட்டெருமை உலா வருவது அதிகரித்து உள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டெருமையை பார்த்ததும் அச்சத்தில் பெண்கள் கைக்குழந்தையுடன் ஓட்டம் பிடிக்கிறார்கள். மேலும் குடியிருப்பு பகுதியில் நடமாடும் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். அதற்கு மாறாக கேரட், அரிசி கஞ்சி உள்ளிட்டவற்றை உணவாக வழங்கி, பாதுகாக்கின்றனர்.

அவற்றை தின்று ருசி கண்ட காட்டெருமை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல விரும்புவது இல்லை. இதுவே ஊட்டி நகருக்குள் அடிக்கடி காட்டெருமை வருவதற்கு காரணம். அந்த காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை, கீழ்கோத்தகிரி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பீதியுடன் வெளியே சென்று வருகின்றனர். எனவே ஊட்டியில் காட்டெருமை நடமாட்டத்தை குறைக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story