அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்


அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 Sep 2018 10:30 PM GMT (Updated: 10 Sep 2018 6:42 PM GMT)

ஏனங்கம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு கிராம மக்கள் சீர்வரிசை வழங்கினர்.

அரிமளம்,

அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகே உள்ள ஏனங்கம் கிராமத்தில் சுமார் 51 ஆண்டு முன்பு தொடங்கபட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு ஏனங்கம் கிராம பொதுமக்கள் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள மாணவர்களை அந்த பள்ளியிலேயே சேர்க்க முடிவு செய்து, இந்த கல்வியாண்டில் 17 மாணவர்களை சேர்த்தனர்.

இந்நிலையில் பள்ளியை சுத்தம் செய்து வர்ணம் பூசி, அடித்தளத்தில் இருந்த பழைய சிமெண்டு தரைக்கு மாற்றாக அழகிய டைல்ஸ் கற்கள் பதித்தும், பள்ளி வளாகத்தில் சுகாதாரமான வகையில் கழிவறைகள் அமைத்தும், பள்ளியை சுற்றிலும் வேலி அமைத்தும் பள்ளியை பொதுமக்கள் அழகுபடுத்தினர். இந்நிலையில் பொதுமக்கள் சார்பில் அந்த பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர்கள் அமருவதற்கு தேவையான இரும்பு நாற்காலிகள், ஆசிரியர்களுக்கான இருக்கைகள் மற்றும் பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி, பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சீர்வரிசையுடன் ஊர்வலமாக பள்ளிக்கு சென்று, புதுக்கோட்டை மாட்ட கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தியிடம் அவற்றை வழங்கினார்கள். தொடர்ந்து பள்ளிக்கு நன்கொடை வழங்கிய பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களை மாவட்ட கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி பாராட்டினார். இதில் அரிமளம் வட்டார கல்வி அதிகாரி திருப்பதி, அரிமளம் கூடுதல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரோஜா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் யாகப்பன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஆஷாகெலன் நன்றி கூறினார்.

Next Story