கல்லட்டி மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம ஆசாமிகள்


கல்லட்டி மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம ஆசாமிகள்
x
தினத்தந்தி 11 Sept 2018 4:15 AM IST (Updated: 11 Sept 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம ஆசாமிகள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் கல்லட்டி, எப்பநாடு, அவலாஞ்சி, முக்குருத்தி, கோடநாடு, கீழ்கோத்தகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர் செடிகள் காணப்படுகின்றன. நீலகிரியில் மொத்தம் 9 வகையாக குறிஞ்சி மலர் செடிகள் உள்ளன. இவை அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பூக்கும். அதில் நீலக்குறிஞ்சி மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் தன்மை கொண்டது. அவை பூக்கும்போது மலைப்பகுதி முழுவதும் நீல நிற போர்வை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளிக்கும். இது காண்போரின் கண்களை மட்டுமின்றி நெஞ்சத்தையும் கொள்ளையடிப்பதாக இருக்கும். மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. அதை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, செல்கின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து புகைப்பட கலைஞர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் உள்ள ராமர் மலையில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களை சில மர்ம ஆசாமிகள் பறித்து விற்பனைக்காக கடத்தி செல்கின்றனர். மேலும் செடிகளை வேரோடு பிடுங்கியெடுக்கவும் செய்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

நீலக்குறிஞ்சி மலர்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், சிலர் அதனை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் செடிகளை பிடுங்கி செல்வதால், மலைப்பகுதியில் அவற்றின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம ஆசாமிகள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் செடிகளை பாதுகாக்கவும் முன்வர வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story