பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு கடை அடைப்பு: உத்திரமேரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 78 பேர் கைது


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு கடை அடைப்பு: உத்திரமேரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 78 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sept 2018 4:00 AM IST (Updated: 11 Sept 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து உத்திரமேரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்திரமேரூர், 

பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருட்கள் விலை அதிக அளவில் உயர்ந்து கொண்டே செல்வதை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி உத்திரமேரூர் பஜார் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் உத்திரமேரூர் அம்பேத்கர் சிலையில் இருந்து பஜார் வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் எரிவாயு சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு மாலைகள் அணிவித்து அதனை தூக்கி வந்தனர். 

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்ததும், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் தலைமையிலான போலீசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட செயலாளர் பாஸ்கரன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயந்தி, செயற்குழு உறுப்பினர் மோகன் உள்பட 78 பேரை கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Next Story