ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் - நாராயணசாமி


ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் - நாராயணசாமி
x
தினத்தந்தி 11 Sept 2018 4:45 AM IST (Updated: 11 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினெட் அறையில் நேற்று இரவு அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அரசுத்துறை செயலாளர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 27 பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மறைந்த தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் புதுவை 100 அடி ரோட்டில் ராஜீவ்காந்தி சிலையில் இருந்து இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும் கருணாநிதியின் பெயர் வைக்கப்படும். புதுவை பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் ஒரு இருக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் பேசி வருகிறோம். காரைக்கால் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும்.

இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், புதுச்சேரி முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் காசிலிங்கம் ஆகியோர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மக்கள் தங்கள் வீடு மற்றும் வயல்களின் தேவைக்கு மணல் அள்ளிக்கொள்ளலாம். மாட்டு வண்டிக்கு ரூ.50, டிராக்டருக்கு ரூ.100–ம், லாரிக்கு ரூ.150–ம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து வளர்ச்சிக்கு கொடுக்கப்படும்.

ஏனாம் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அங்குள்ள மக்களுக்கு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட 32,500 பேர் நிதி உதவி பெற்றனர். இதில் 28,800 பேர் வீடு கட்டி முடித்துள்ளனர். 2,949 பேர் வீடுகள் கட்டும் பணியை முடிக்கவில்லை. எனவே அவர்கள் தாங்கள் பெற்ற நிதி உதவியுடன் ரூ.3 ஆயிரம் அபராதமாக சேர்த்து மீண்டும் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story