விலைஉயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு: மேலும் ஒருவர் கைது; 26 வாகனங்கள் பறிமுதல்


விலைஉயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு: மேலும் ஒருவர் கைது; 26 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Sep 2018 11:00 PM GMT (Updated: 10 Sep 2018 8:27 PM GMT)

கூடுவாஞ்சேரி பகுதியில் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் 26 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வண்டலூர், 

கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்களை பிடிக்க வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பாஸ்கர், சப்–இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், செல்வம் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 

 கடந்த 5–ந்தேதி ஆதனூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தைலாவரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்ற விஜய பாஸ்கர் (வயது 31), கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பழனி தங்கம்(20) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். 

விசாரணையில் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும் ஒருவர் கைது

அவர்கள் அளித்த தகவலின் பேரில் திருச்சி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(29) என்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து விலை உயர்ந்த புத்தம் புதிய 17 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் உள்பட 26 வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

உல்லாச வாழ்க்கைக்கு...

கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம் பற்றி வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் நிருபர்களிடம் கூறியதாவது:– 

பிடிப்பட்ட வாலிபர்கள் ஒரு மாதத்திற்கு விலைஉயர்ந்த 2 மோட்டார் சைக்கிள்களை திருடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.  திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருச்சி போன்ற நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்து, அந்த பணத்தில் அவர்கள் உல்லாசமாக வாழ்க்கை நடத்தி வந்து உள்ளனர். மேலும் மதுபோதை பழக்கங்களுக்கும் அடிமையாகி விட்டனர். இதுபோன்ற மோட்டார் சைக்கிள்களை திருடும் திருடர்களை பிடிப்பதற்காக தனிப்படை தொடர்ந்து செயல்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story