ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் 4, 5, 6, 8 மடை பாசன சங்க உறுப்பினர் குணசேகரன்கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், கோரம்பள்ளம் குளம் தாமிரபரணி வடிநில கோட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப்பணித்துறையின் மெத்தனத்தால் குளத்தில் 4-வது, 5-வது மடைகளில் உள்ள வாய்க்கால் மற்றும் வடிகால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. மீளவிட்டான் கிராமம் 2-ல் உள்ள வடிகால் ஆக்கிரமிப்பால், பெரியநாயகிபுரத்தில் 500 வீடுகளும், முள்ளக்காடு கிராமம் எல்லையில் உள்ள வடிகால் ஆக்கிரமிப்பால் வீரநாயக்கன்தட்டு கிராமத்தில் 500 குடியிருப்புகள் மற்றும் ஆயிரம் வாழை பயிர்களும் அழியும் நிலையில் உள்ளது. பருவமழை தொடங்கும் முன்பு எங்கள் விவசாய பகுதியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, தகுந்த முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
கயத்தாறு தாலுகா கரடிகுளம் இந்திரா குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எங்கள் பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் உப்பு தண்ணீரை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே எங்கள் பகுதியை ஆய்வு செய்து புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி 17-வது வார்டு பாக்கியநாதன் விளையை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 60 வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளுக்கும் அடிப்படை வசதியான குடிநீர் வசதி, தெரு விளக்கு, சாலை வசதி இன்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
வேப்பலோடை சுற்றுவட்டார மானாவாரி விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழில் புரிவோர் நலச்சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள வடக்கு கல்மேடு கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து ஆழ்துளை கிணறு அமைக்க முயன்று வருகிறார். எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வீரபாகு, திருநாவுக்கரசு, ஞானதுரை மற்றும் பலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் ஸ்ரீவைகுண்டம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி, அவருடைய மனைவி சுலோச்சனா மற்றும் உறவினர்களான சிதம்பரம், சிவகாமி, முருகன், ராணி ஆகியோர் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தினர். அவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக எங்களை போன்ற பலரிடம் சீட்டுப் பணம் வசூல் செய்துவிட்டு, திடீரென ஊரை காலி செய்துவிட்டு சென்று விட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, சீட்டுப் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.
முறப்பநாடு ஊர்மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதியில் கைலாசநாதர் கோவிலும், சொக்கலிங்க சாமி கோவிலும் உள்ளது. இந்த கோவில்களின் முன்பு தாமிரபரணி நதிக்கரையில் 11.10.2018 முதல் 24.10.2018 வரை புஷ்கர விழா நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த விழாவை காரணம் காட்டி தனிநபர் தனது இடத்தில் புதிதாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து கோவில் கட்ட உள்ளார். இதனால் விழாவின் புனிதம் கெடும். எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story