பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் மும்பையில் கடைகள் அடைப்பு


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் மும்பையில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 10 Sep 2018 10:45 PM GMT (Updated: 10 Sep 2018 9:38 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தது.

மும்பை,

மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டத் துக்கு தேசியவாத காங்கிரஸ், மராட்டிய நவநிர்மாண் சேனா, சமாஜ்வாடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்தன. முழு அடைப்பில் சிவசேனா பங்கேற்காது என அறிவித்தது.

புதிய உச்சம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடந்த நிலையில், நேற்று அவற்றின் விலை புதிய உச்சத்தை தொட்டது. நேற்று முன்தினம் 87 ரூபாய் 89 காசுகள் இருந்த பெட்ரோல் விலை நேற்று 23 காசுகள் உயர்ந்து 88 ரூபாய் 12 காசுகள் என விற்பனை செய்யப்பட்டது.

77 ரூபாய் 09 காசுகள் இருந்த டீசல் விலை நேற்று 23 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 32 காசுகள் என விற்பனை செய்யப்பட்டது.

கடைகள் அடைப்பு

இந்தநிலையில், முழு அடைப்பையொட்டி மும்பை உள்பட மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் பஸ்கள் வழக்கம் போல ஓடின. ஆட்டோ, டாக்சிகள் குறைவான அளவே இயக்கப்பட்டன. இதுபோல் தனியார் வாடகை கார்கள் வழக்கத்தை விடவும் குறைவாகவே இயங்கின. பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.

நவநிர்மாண் சேனா முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததால் மும்பை, தானே, நவிமும்பை பகுதியில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு இருந்தன.

செம்பூர், சகார் உள்ளிட்ட இடங்களில் திறந்து இருந்த ெபட்ரோல் பங்குகளை நவநிர்மாண் சேனாவினர் மூடும்படி எச்சரித்தனர். தானேயில் அக்கட்சியினர் ஆட்டோக் களை வழிமறித்து நிறுத்தினர்.

காங்கிரசார் ரெயில் மறியல்

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், நவநிர்மாண் சேனா கட்சியினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாநில காங்கிரஸ் தலைவர் அசோக்சவான் தலைமையில் அந்தேரி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அசோக் சவான், மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மின்சார ரெயிலில் வந்து இறங்கினார்கள்.

அசோக் சவான் கைது

அந்தேரி ரெயில் நிலையத்தின் 3 மற்றும் 4-ம் பிளாட்பாரத்தில் இறங்கி ரெயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் அசோக்சவான் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். இதன் காரணமாக மேற்கு ரெயில்ேவ வழித்தடத்தில் 15 நிமிடம் வரை ரெயில் சேைவ பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அசோக் சவான் கூறுகையில், மோடி மற்றும் பட்னாவிஸ் அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்து கொள்ளையடித்து வருகிறது. இது நியாயமற்றது. இந்த அரசுகள் மக்களின் வாழ்க்கையை அழித்து கொண்டு இருக்கின்றன. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், என்றார்.

பஸ்கள் மீது கல்வீச்சு

இதுபோல மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியினர் டி.என். நகர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் புகுந்து போராட்டம் செய்தனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில் சேவையும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தேசியவாத காங்கிரசார் பைகுல்லா, கோவண்டி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செம்பூர் வாஷிநாக்கா, பரேல் டி.டி., லால்பாக் சயான்கோலிவாடா பிரதிக்சா நகர், காந்திவிலி, கோரேகாவ் உள்ளிட்ட இடங்களில் பெஸ்ட் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்கள்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சில பஸ்களின் டயரையும் பஞ்சராக்கி விட்டனர். இதில், மொத்தம் 15 பெஸ்ட் பஸ்கள் சேதப்படுத்தப் பட்டன.

882 பேர் கைது

பிரதிக்சா நகரில் பஸ் மறியல் செய்த மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ரவிராஜா உள்ளிட்ட காங்கிரசார் கைதானார்கள்.

தின்தோஷியில் பா.ஜனதா கவுன்சிலர் வினோத் மிஸ்ராவின் அலுவலகத்தை நவநிர்மாண் சேனாவினர் அடித்து நொறுக்கினார்கள்.

மும்பையில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது மொத்தம் 882 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மாநிலம் முழுவதும்

இதேபோல மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டம் செய்தனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஸ், ஆட்டோக்கள் ஓடின.

அவுரங்காபாத்தில் நடந்த போராட்டத்தில் நவநிர்மாண் சேனாவினர் மோட்டார் சைக்கிளுக்கு சொட்டு, சொட்டாக பெட்ரோலை போட்டு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதுபோல புனே கும்தேக்கர் சாலையில் மறியலில் ஈடுபட்ட நவநிர்மாண் சேனா கட்சியினர் தனியார் பஸ் ஒன்றை அடித்து நொறுக்கினர். மேலும் சில மாநகராட்சி பஸ்களையும் கல்வீசி தாக்கினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story