விநாயகர் சதுர்த்தி அன்று காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தல்


விநாயகர் சதுர்த்தி அன்று காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Sept 2018 8:15 AM IST (Updated: 11 Sept 2018 8:10 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி அன்று காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் வலியுறுத்தினார்.

வேலூர், 

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகள் வைப்பது தொடர்பாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் முன்னிலை வகித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா முக்கிய பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா சிறப்பாக வேலூர் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்ய உள்ளனர். இந்த ஆண்டு துணை போலீஸ் சூப்பிரண்டுவிடம் அனுமதி பெற்று சிலைகளை வைக்கலாம் எனக் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் நமது மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதனால் பலர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்புக்குச் சான்றிதழ் கேட்க சென்றால் அலைக்கழிக்கின்றனர். 2 நாட்களே உள்ள நிலையில் நாங்கள் எவ்வாறு இதனை பின்பற்ற முடியும். மாவட்ட நிர்வாகம், காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும். இந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்? எனத் தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட காவல்துறை அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும், என்றனர்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பேசியதாவது:-

இந்த விழா மகிழ்ச்சியான விழா. பிரச்சினை இல்லாமல் கொண்டாட வேண்டும் என நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். மாவட்ட காவல்துறைக்கு விழாக் குழுவினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மின்வாரிய அலுவலர்களுக்கு உங்களது கோரிக்கை குறித்து எடுத்துக் கூறப்படும்.

மின் இணைப்புக்கான சான்றிதழ் உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு எந்தவித பிரச்சினையும் இல்லை. இதுபோல இந்த ஆண்டும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விழா நடக்க வேண்டும் என்பதே அனைவரது நோக்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, அலெக்ஸ், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, நாகராஜன், லோகநாதன், இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், பொருளாளர் பாஸ்கரன், கோட்ட செயலாளர்கள் ரவி, தீனன், ரகு, மாவட்ட செயலாளர்கள் பாண்டியன், சிவா, பிரவீன், மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன், மாநகர பொதுச் செயலாளர் அன்புமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்த ஆண்டு சிலைகள் வைப்பது தொடர்பாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தளர்த்த சென்னையில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன், மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் தலைமையில் நாளை (அதாவது இன்று செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரதம் நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே 12-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து இந்துக்கள் வழிபாட்டு முறைகளில் பல கட்டுப்பாடுகள் விதித்து இந்துக்களை நசுக்கின்றனர். இதனை அரசு கைவிட வேண்டும், என்றார்.

Next Story