மழைநீர் சேகரிப்பு முறையை செயல்படுத்த வேண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள்


மழைநீர் சேகரிப்பு முறையை செயல்படுத்த வேண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Sept 2018 2:14 AM IST (Updated: 12 Sept 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் சேகரிப்பு முறையை செயல்படுத்த பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை,

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை முறையாக பராமரிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து என்ஜினீயர்களும் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதோடு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த கையேடுகளையும் வழங்கி வருகின்றனர்.

சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை என்ஜினீயர் சிவசண்முகம் தலைமையில் என்ஜினீயர்கள் அடங்கிய குழுவினர் அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மூலம் மழைநீரை கிணற்றுக்குள் செலுத்தும் கட்டிடங்களின் நிலத்தடி நீரின் தரம் உயர்ந்து இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உடனடியாக உருவாக்குதல் மற்றும் பராமரிப்பதன் மூலம் நிலத்தடி நீரின் அளவு உயர்வதோடு அதன் தரமும் உயர்வதால் பொதுமக்கள் அனைவரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையை செயல்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story